ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள 3-வது மணல்திட்டு ஒன்றில் மர்மமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்றை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். தனுஷ்கோடி 3-வது மணல்திட்டு பகுதிக்கு படகில் வந்த நபர்கள் யார், தமிழகத்திற்குள் தப்பி வந்தார்களா? அல்லது மீண்டும் இலங்கைக்கு சென்று விட்டார்களா என எந்த ஒரு தகவலும் தெரியாது குழப்பமான நிலையே இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையிலிருந்து இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான அதிவேக விமானம் ஒன்று மண்டபம், ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் மற்றும் கடலோர பகுதிகளில் தாழ்வாக பறந்தபடி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது.




தனுஷ்கோடி 3-வது மணல்திட்டு பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகு மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்வதை கண்காணிப்பதற்காகவும் இந்திய கடலோர காவல்படையின் அதிவேக விமானம் தாழ்வாக பறந்தபடி ரோந்து பணியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.


 


'பாதுக்காப்புக்கு அச்சுறுத்தலா'


தனுஷ்கோடி 3-வது மணல்திட்டில் மர்மமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை படகால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பார்க்கப்படுகிறது. ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதி உள்ளது.  தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் 13 மணல் திட்டுகள் உள்ளன இதில் 5-வது திட்டுடன் இந்திய கடல் எல்லை பகுதி முடிவடைகின்றது. அதன் பிறகு இலங்கை கடல் எல்லை தொடங்கி விடுகின்றது. இந்தநிலையில் ராமேசுவரம்-தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் இந்திய எல்லைக்குட்பட்ட 3-வது மணல் திட்டு பகுதியில் புதிதாக படகு ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த வழியாக மீன் பிடித்து வந்த நாட்டுப்படகு மீனவர்கள் சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சுங்கத்துறையினர் தனுஷ்கோடி 3-வது மணல் திட்டு பகுதிக்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டு இருந்த படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் அந்த படகு இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகு என்பதும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய படகு என்பதும் தெரியவந்தது.




தனுஷ்கோடி 3-வது மணல் திட்டு பகுதியில் அந்த படகில் வந்து படகை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய அந்த மர்ம நபர்கள் யார், படகில் ஏதேனும் தங்கக்கட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் ஏதும் கடத்திக் கொண்டு வந்தார்களா, படகில் இருந்த நபர்கள் கடத்தல்காரர்கள் மூலம் தமிழகத்தில் ஊடுருவி வந்துள்ளார்களா? அல்லது மீண்டும் இலங்கைக்கே சென்று விட்டார்களா என எந்த ஒரு தகவலும் தெரியாததால் சுங்கத்துறை, கடலோர போலீசார், கியூ பிரிவு உள்ளிட்ட உளவு பிரிவு போலீசார் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். 


இந்திய எல்லை அருகே உள்ள மூணாவது மணல்திட்டு பகுதியில் மர்மமான முறையில் இலங்கை படகை நிறுத்திவிட்டு அதில் வந்த நபர்கள் யார்? எங்கு சென்றார்கள் என எந்த ஒரு தகவலும் தெரியாத நிலை இருந்து வருவதால் தனுஷ்கோடி கடல் பகுதியில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக கூறப்படுகின்றது. இதனிடையே தனுஷ்கோடி 3-வது மணல்திட்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த பிளாஸ்டிக் படகை, சுங்கத்துறையினர் நேற்று முன் தினம்  மீனவர்கள் உதவியுடன் ராமேசுவரம் கொண்டு வந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் தாழ்வாக பறந்த படி இந்திய கடலோர காவல்படையின் அதிவேக விமானம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.




கடந்த சில மாதங்களாகவே, இலங்கையில், சீனா பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்து வருகிறது அதேபோல் இலங்கையின் துறை முகங்களிலும் சீனா முதலீடு செய்து வருகிறது. இது இலங்கையை பெருங்கடனில் சிக்க வைத்து, அந்தநாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சீனாவின் முயற்சியாக பார்க்கப்படுகிறது. சீனாவின் கரங்களுக்குள் இலங்கை சிக்குவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும் என கருதப்படுகிறது.


இந்த நிலையில் இலங்கையின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தமிழகத்திற்கு அருகே இருக்கும் பகுதிகளில் மின்சக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கப்பட்டது, இதற்கு இந்தியா, இலங்கை அரசிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், மூன்றாவது தரப்பால் முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான கவலையின் காரணமாக, மின்சக்தி திட்டத்தை ரத்து செய்வதாக சீன தூதரகம் அண்மையில் அறிவித்தது.




இந்தசூழலில் சீனா, இந்தியாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தது. கடந்த மாத ஜனவரி மாத தொடக்கத்தில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினார். அப்போது அவர், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் நன்மை பயக்கிறது. இரு நாட்டு மக்களின் அடிப்படை நலனுக்கும் உதவுகிறது. இருநாடுகளின் நட்புறவு எந்த மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை. எந்த மூன்றாம் தரப்பினரும் இதில் (இலங்கை - சீனா நட்புறவில்) தலையிடக்கூடாது" என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.