தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் சென்னை மற்றும்  டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பதிவானது. அதிலும் சீர்காழியில் அதிக மழை பெய்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.




ஆனால் தென்மாவட்டங்களில் பருவமழை போக்கு காட்டியது. நவம்பர் மாத துவக்கத்தில் மழை பெய்து இருந்தாலும் தொடர்ச்சியாக மழை இல்லாததால் மானாவாரி விவசாயம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக விளாத்திகுளம் பகுதிகளில் மழை இல்லாததாலும் பனிப்பொழிவு அதிகம் இருந்ததாலும் பயிரிடப்பட்ட கடலைகள் பாதிக்கப்பட்டது.




தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொய்த்து வந்ததால் குறிப்பாக பாபநாசம், மணிமுத்தாறு போன்ற அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலை ஏற்பட்டது. அடுத்தாண்டு தொடக்கத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி விடும் சூழல் காணப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. தூத்துக்குடி, காயல்பட்டிணம், திருச்செந்தூர், கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஓரளவு சூடு தணிந்தது.




இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்ய துவங்கியது. சுமார் இரண்டு மணி நேரம் தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழை பெய்ததால் நகரின் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடி தமிழ் சாலை, காசுக்கடை பஜார் சாலை பகுதிகளில் வழக்கம்போல் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனை தொடர்ந்து மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.




கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.




தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை 6 முதல் 8 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் தூத்துக்குடி மாநகரில் மழை அளவு மானி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.




அதிகாலை முதலே பெய்து வரும் கனமழையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிக்கை இல்லாததால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். இதனையடுத்து 8.12 மணிக்கு மழைக்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் மழையை நனைந்தவாறு வீடு திரும்பினர்