தென்காசி மாவட்டத்தில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு,  வடகரை, பண்பொழி, திருமலை கோவில் சாலை, இலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் இளைஞர்கள் சிலர்   பைக் ரேஸில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. மேலும் அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். 


இதை அறிந்த அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர் அவர்களை தேடி வந்தனர். அப்போது வடகரை கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரின் மகன் முகம்மது ஆசிக் (21), வடகரை ரஹ்மானியாபுரம் மேலத்தெருவை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரின் மகன் ஷேக் ஒலி(25) ஆகியோர் மீது அச்சன்புதூர் காவல்  நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் புளியரை கொல்லம் மெயின் ரோட்டை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் கௌதம் கிருஷ்ணா (24) என்பவரும் பைக் ரேஸில் ஈடுபட்டதாக அவர் மீது இலத்தூர் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் வட்டார போக்குவரத்து துறையினருக்கு காவல்துறை பரிந்துரை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது


இதே போன்று நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தீபாவளி அன்று பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பைக்கின் முன்பகுதியில் வெடியை கட்டி பின் வீலிங் செய்யும் போது அதனை வெடிக்கச் செய்துள்ளனர், இதனை வீடியோவாக எடுத்ததோடு அதனை தங்களது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டு உள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் அவர்களை தேடி வந்த நிலையில் தற்போது வீலிங் செய்து வெடி வெடித்த சுஜின் (22) மற்றும் வலைதளங்களில் பதிவிட்ட மணிகண்டன் (26) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் இதுபோன்று உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், ஆபத்தான முறையில் சாகசம் செய்து பிற இளைஞர்களுக்கு தவறான முன் உதாரணமாக இருக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்