தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ளது பணவடலிசத்திரம். இங்குள்ள வண்ணான் பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்.  இவரது மகன் கனகராஜ் (35). கனகராஜின் மனைவி சகுந்தலா (26).  இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஏழு வருடம் ஆன நிலையில் ப்ரவின் (6) மற்றும் ஹர்சிகா (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கனகராஜ் பணவடலிசத்திரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளியை கொண்டாடிய நிலையில்  நேற்று மாலை கனகராஜ் மற்றும் அவரது மனைவி சகுந்தலா (26) இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.


குறிப்பாக ஏற்கனவே கடந்த சில மாதங்களாகவே இருவருக்குமிடையே அவ்வப்போது பிரச்சினைகள் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்று மாலை இவர்களது இளைய மகள் வீட்டுக்கு வெளியே நின்று கதவை தட்டியபடி அம்மாவை கூப்பிட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாத நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது தாய், தந்தை இருவரும் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு மகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். கனகராஜ் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட காயங்களுடன் தரையிலும், மனைவி சகுந்தலா  தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்துள்ளனர்.


மேலும் இது குறித்து உடனடியாக பணவடலிசத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த பனவடலிசத்திரம் காவல் துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான  காரணங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாடிய மறுநாளே கணவன் - மனைவி இருவரும் ஒரே வீட்டில் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண