தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டிபுரத்தை சேர்ந்தவர் லூர்துபிரான்சிஸ். இவர் முறப்பநாடு அருகே கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று அவர் பணியில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அரிவாளுடன் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜிசரவணன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவரது உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் துயரமான சம்பவம், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மிக நேர்மையானவர். இதற்கு முன்பு ஆதிச்சநல்லூரில் பணியாற்றிய போது அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்ததை பல்வேறு எதிர்ப்புகளை மீறி மீட்டெடுத்தார். அப்போது அவருக்கு பல மிரட்டல்கள் வந்தது. உடனடியாக காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக கடந்த 1½ ஆண்டு காலம் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் அவரது அலுவலகத்திற்குள் புகுந்த இரண்டு மர்ம நபர் அவரை கொலை செய்துள்ளனர். உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மீட்டு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை அளித்த போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ்.ஆர் ராமச்சந்திரன், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து அவரது உடலை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்திற்கு ஆறுதலும் கூறினர். தொடர்ந்து வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் அவரது குடும்பத்திற்கு வழங்கினார். முன்னதாக கனிமொழி எம்பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மிகச் சிறப்பாக தன்னுடைய பணியை செய்யக்கூடிய அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. தமிழக முதலமைச்சர் இந்த சம்பவத்தை கண்டித்து உயிரிழந்த விஏஓ குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார். விரைவில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள், காவல்துறை அதிகாரிகளும் நடவடிக்கை குறித்து உறுதி அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு சரியான தண்டனை தரப்படும் என கூறினார்.
இதனிடைய முறப்பநாடு போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரையும் தேடி வருகின்றனர்.