கோடை வெயில் உச்சம் காரணமாக மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உப்பு விலை கடும் வீழ்ச்சி டன் ருபாய் 3500 முதல் 3000 வரை விற்பனையான உப்பு விலை ரூபாய் 1300 முதல் 1500 ஆக குறைந்தது.





இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வருகிறது இங்கு சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மற்ற கடலோர மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.




தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரையிலான கடலோர பகுதிகளில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி தொழில் நடந்து வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு லாரிகளில் ஏற்றுதல், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர்.இந்த உப்பு தொழிலை நம்பி சுமார் 50,000 ஆண், பெண் தொழிலாளர்கள் உள்ளனர் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஒன்பது மாதங்கள் உப்பு உற்பத்தி நடைபெறும் ஆனால் சில ஆண்டுகளாக உப்பு உற்பத்தி நடைபெறும் காலங்களில் திடீர் திடீரென மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.




இந்த ஆண்டு ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கிய நிலையில் இரண்டு மாதங்களில் திடீர் திடீரென வளிமண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாக  மழை பெய்தது இதைத் தொடர்ந்து உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 20 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது இதன் காரணமாக உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உப்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் வரை டன் ஒன்று ரூபாய் 3500 முதல் 3000 வரைக்கும் விற்பனையான உப்பு தற்போது உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுவதால் டன் 1500 இருந்து 1300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பு நல்ல விளைச்சல் கண்டு வருவதால் உப்பை தேக்கி வைக்கும் பணியில் உப்பு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.