ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் அழிந்து வரும் அரிய மர வகைகள் நடப்பட்டு மரங்களின் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது. வானம் பார்த்த பூமியாக உள்ள மாவட்டத்தில் மழை வளம் பெருக வாய்ப்பாக அமைந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் என மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பரமக்குடி ஒன்றியம் உரப்புளி மற்றும் வேந்தோணியில் வருடத்திற்கு 10 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களுக்கு மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தொடர்ந்து உரப்புளியில் மட்டும் 25 ஆயிரம் மரங்கள் குறுங்காடுகள் திட்டத்தில் வளர்க்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்ட மரங்கள் சரணாலயத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் நாளுக்கு நாள் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. புவி வெப்பமயமாக மரங்கள் அழிப்பதுதான் முக்கிய காரணமாக விளங்குகிறது. இதனையடுத்து கடந்த ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக அரசு முதன் முதலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மரங்களுக்காக சரணாலயத்தை ஏற்படுத்தி அதில் அழிவின் விளிம்பில் உள்ள மரங்களை பாதுகாத்து விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தின் பாரம்பரியமான பல்வேறு வகை மரங்கள் காணாமல் போய்விட்டன. அவற்றை மீட்டெடுப்பதுதான் மரங்கள் சரணாலயத்தின் முக்கிய நோக்கம், ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் உரப்புளி கிராமத்தில் 11 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இதில் மஞ்சள் கடம்பு,பரம்பை, குமிழ், மலை அரசி , இச்சி மரம், நறு உளி, பன்னீர், இலுப்பை,ருத்ராட்சம், அசோக மரம், யானை குண்டுமணி உள்ளிட்ட 133 வகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கு இணையாக 133 அரிய வகை மரங்கள் வளர்க்கப்படுகிறது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரம் இடங்களில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரங்கள் சரணாலயத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு கொய்யா, வேம்பு, புளி, புங்கை உள்ளிட்ட மர கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மரங்கள் குறித்த விளக்கமும் அளிக்கப்படுகிறது. மரம் வளர்ப்பின் அவசியம் குறித்தும் எடுத்து கூறப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்தும் பார்வையாளர்கள் வந்து செல்லும் வண்ணம் மரங்கள் சரணாலயத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் மரங்களின் பெயர்கள், பயன்கள், அவற்றின் வளர்ப்பு குறித்த விளக்கப்பலகையும் பொறுத்தப்பட்டு வருகிறது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உரப்புளி, வேந்தோணி ஆகிய இரு இடங்களில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. உரப்புளி பண்ணையில் ஆண்டுதோறும் 5 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு 10 லட்சம் மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மரங்கள் சரணாலயத்தை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் முதன் முதலாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி ஊரக வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்பட்ட மரங்களின் சரணாலயத்தை காண பலரும் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். பறவைகள், விலங்குகள், முதலைகள், கடல்வாழ் உயிரினங்கள் என பலவற்றிற்கும் சரணாலயம் உள்ள நிலையில் மரங்களை பற்றி அறிந்து கொள்ள முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ள மரங்களின் சரணாலயம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.