தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்து இருந்தது, அதன்படி நேற்றிரவில் இருந்தே அம்பை அருகே மலையிலுள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் பரவலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கு பகுதியில் 190 மி.மீ மழையும், ஊத்து பகுதியில் 169 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதனால் மலை அடிவாரத்திலுள்ள மணிமுத்தாறு அணைக்கு 3 மணி நிலவரப்படி 28215 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக சுமார் 17 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து காணப்பட்டுள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர்மட்டம் 96.25 அடியாகவும் உள்ளது. அதே போல 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 134.60 அடி நீர் உள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 23,388 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே போல 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் 147.24 அடி நீர் உள்ளது. பாப நாசம் மற்றும் சேர்வலாறு அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் வெளியேற்றம் என்பது இல்லை.
மேலும் மணிமுத்தாறு அணைக்கு மேலே உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்திருந்த நிலையில, தற்போது கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. இதனால் தற்போதும் தடை நீடிக்கிறது. மேலும் அணையில் இருந்து வெளியேறும் உபர் நீர் மற்றும் காட்டாற்று வெள்ள நீர் என தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பொழிவு இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் அதிக கன மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட மலைகிராமங்களிலும், கடற்கரை பகுதிகளிலும், இவற்றை ஒட்டியுள்ள ஊர்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் அதிகனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நேரங்களில் உரிய முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீர் நிலைகளில் இறங்க வேண்டாம்; மரங்கள் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம்; கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திட வேண்டும்; சாலைகள், பாலங்களின் மீது வெள்ளம் சென்றால் எக்காரணம் கொண்டும் அதன் மீது செல்லக்கூடாது. மேலும் அதிகனமழை பொழிவு உள்ள நேரங்களில் பாதுகாப்பு காரணங்களால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
மேலும் மழை பாதிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 1077 என்ற எண்ணில் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்திற்கோ, 1070 என்ற எண்ணில் என்ற மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கோ தெரிவிக்கலாம். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான உதவிக்கு 101 மற்றும் 112; மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு 104; அவசர மருத்துவ உதவிக்கு 108; மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 'மின்னகம்' உதவி மையத்த்தை 94987 94987 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அவசர கால தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.