மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, பாசி செடிகளை மஞ்சள் தேமல் நோய் தாக்குவதால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் வட்டாரங்களில் மானாவாரி பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் விவசாயம் செய்ய வழி இயலாமல் துவண்டு இருந்தனர். இந்தாண்டாவது மழை பெய்யுமா என எதிர்பார்த்து இருந்த நிலையில் வருண பகவான் கருணை காட்டியதால் போதுமான மழை பெய்து உள்ளது.




தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், கொத்தமல்லி, மிளகாய் போன்ற பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். உளுந்து, பாசி விதைக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேலான நிலையில், தற்போது செடிகளில் பூப்பிடித்து வருகிறது. இந்நிலையில் இச்செடிகளில் மஞ்சள் தேமல் எனப்படும் ஒரு வகை பூஞ்சாண நோய் தாக்கி வருகிறது. இதனால் இந்தாண்டு உளுந்து, பாசிப்பயறு மகசூல் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர்.




இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறும் போது, கடந்த காலங்களில் நாட்டுரக உளுந்து, பயறுவகைகள் பயிரிடப்பட்டன. இதில் மகசூல் களத்துக்கு வந்து சேர சுமார் 120 நாட்களாகும். அப்போது விவசாயிகள் தங்கள் நிலங்களில் முந்தையஆண்டு விளைந்த திரட்சியான கதிர்களில் உள்ளவிதைகளை பிரித்தெடுத்து வண்டுகள் தாக்காதவாறு அவற்றை வேப்பிலையில் கட்டிவைத்து அடுத்து ஆண்டு விதையாக பயன்படுத்தினர். இதனால் தானியங்கள் எவ்வித ரசாயன கலப்பின்றி 100 சதவீதம் ஆரோக்கியமானதாக இருந்தது. கடந்த முப்பது ஆண்டுகளாக முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறையை முற்றிலும் கைவிட்டு புதிய தொழில்நுட்ப முறையில் அதிகளவு மகசூல் பெற வீரிய ஒட்டு ரக விதைகளையும், ரசாயன உரங்களையும், உழவு செய்ய இயந்திரங்களையும் கொண்டு விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு அரசு பயறு உற்பத்தியை தேசிய அளவில் முதன்மைப் படுத்த விவசாயிகளுக்கு குறைந்த நாட்களில் விளையக்கூடிய புதிய வகை உளுந்து, பாசி விதைகளை வழங்கியது. இந்த விதைகள் தற்போது விதைப்பு செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேலான நிலையில் பூப்பிடித்து வருகிறது. உளுந்து, பாசி செடிகளில் மஞ்சள் தேமல் எனப்படும் ஒரு வகை பூஞ்சாண நோய் தாக்கி வருகிறது. செடிகளில் பூ அரும்பி காய் பிடிக்கும் சமயத்தில் நோய் பரவுவதால் காய் மணிப்பிடிப்பின்றி தோல்பகுதி தடித்து சதையாக உள்ளது. இதனால் போதிய விளைச்சல் கிடைக்காது. மஞ்சள் தேமல் எனப்படும் பூஞ்சாண நோயை கட்டுப்படுத்த போதிய ஆலோசனைகளை அதிகம் செலவு ஏற்படாதவாறு வேளாண் அதிகாரிகள் வழங்க வேண்டும்” என்றார்