கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலம்மாள் பாட்டிக்கு தமிழக அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கலுங்கடி பகுதியில் வசிக்கும் மூதாட்டி வேலம்மாள் தமிழக அரசு கொரோனா நிவாரண நிதி பெற்ற புகைப்படம் வைரலானது. அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ’ஏழையின் சிரிப்பு எங்கள் ஆட்சியின் சிறப்பு’ என தெரிவித்திருந்தார். மேலும் கடந்த மார்ச் மாதம் குமரி வந்த முதல்வர் மூதாட்டியை நேரில் சந்தித்து இலவச வீடு தருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 6 மாதங்களாக அவருக்கு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து அந்த மூதாட்டி அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் நேற்று இரவோடு இரவாக தமிழக அரசு சார்பில் இலவச வீடு மூதாட்டி வேலம்மாளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி வாரியம் மூலம் மூதாட்டிக்கு வீடு ஒதுக்கிய நிலையில் அந்த வீட்டை பெறுவதற்கு 75 ஆயிரம் ரூபாய் அரசுக்கு கட்ட வேண்டிய சூழல் இருந்தது. இதனை அந்த மூதாட்டிக்காக திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் பிள்ளை என்பவர் மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து குமரி மாவட்ட கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மற்றும் பூதலிங்கம் பிள்ளை ஆகியோர் மூதாட்டியை நேரில் சென்று வீடுக்கான ஆணையை வழங்கினார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்