வசந்த உற்சவம்:


நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமையான சிவாலயமாக நெல்லையப்பர் - காந்தியம்மன் திருக்கோவில் உள்ளது.  இத்திருக்கோவிலின் முக்கிய திருவிழாவில் ஒன்று வசந்த உற்சவம்.  கோடை வெப்பம் அதிகம் வாட்டும் திருநெல்வேலி நகரில் மக்களின் வாழ்வியலோடு இணைந்தது இந்தத் திருவிழா.


வசந்தத்தின் தொடக்கத்தை கொண்டாடும் தமிழ்ச்சமூகம் முன்பு வசந்தத் திருநாளை சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரி முடிந்ததும்  வசந்த மண்டபத்தில் பெருமான் எழுந்தருள்வார். அப்போது இதனை நாற்பத்தியொரு நாட்கள் பெருந்திருநாளாகக் கொண்டாடியது. குறிப்பாக வைகாசி விசாகத்தில் பூர்த்தியாகும். ஆனால் தற்போது 11 தினங்கள் மட்டுமே  இந்த திருவிழா நடைபெறுகின்றது.




வெற்றிவேர் பந்தலும், நீர் நிரம்பிய அகழியும்:


இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று துவங்கியது. திருக்கோவில் உள் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் தண்ணீர் நிரப்பபெற்ற அகழியின் நடுவே உள்ள மண்டபத்தில் வெற்றிவேர் பந்தலில் கீழ் சுவாமி அம்பாளை எழுந்தருள செய்வார். குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை மண்டபம் முழுவதும் அலங்காரம் செய்திருந்தனா். தினமும் காலையில் சுவாமி அம்பாளுக்கு நவகலசங்கள் வைத்து ஹோமங்கள் வளா்க்கப்பட்டு பூர்ணாகுதி நடைபெறும். தொடா்நது 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு  பருத்தி ஆடைகள் அணிவிக்கப்பட்டு வாசனை மலா்கள் சாத்தி, மகா தீபாராதனையும் செய்யப்பட்டது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


நந்தவனம் வலம் வருதல்:


சோடச தீபாராதனை காண்பிக்கப்பட்டதும் வேதியர்கள் வேதம் ஓத ஓதுவாமூர்த்திகள் திருமுறை பாட மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் வெள்ளிச்சப்பரத்தில்  நத்தவனத்தை சுற்றி ஏழுமுறை வலம் வந்தனர். குறிப்பாக ஒவ்வோர் சுற்றுக்கும் முறையே ஆகம பாராயணம், வேத பாராயணம், திருமுறை பாராயணம், இராஜ மேளம், பஞ்ச வாத்யம் என வாசிக்கப்படும். ஏனைய இராகங்கள் வாசித்து வசந்த மண்டபத்தின் முன்னிருக்கும் அலுப்பு மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து தரிசனம் செய்வர்.