தூத்துக்குடி மாவட்டத்தில் சூரங்குடி, வேம்பார், தருவைகுளம், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, பழையகாயல், ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதிகள் உப்பு உற்பத்திக்கு ஏற்றதாக அமைந்து உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 1.75 கோடி டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் குஜராத்தில் 1.25 கோடி டன் உப்பும், தூத்துக்குடியில் 25 லட்சம் டன் உப்பும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் முதல் வாரம் வரையில் உப்பு உற்பத்தி நடக்கிறது.
இந்த ஆண்டு வழக்கம் போல் உப்பு உற்பத்தி தொடங்கியது. ஆனால் அவ்வப்போது பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. உப்பு உற்பத்தி அதிகரிக்கும் நேரத்தில், அதற்கு முட்டுக்கட்டை போடுவது போன்று மழை பெய்து வருகிறது.
இது குறித்து தன்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் தேன்ராஜ் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை அவ்வப்போது பெய்து வரும் காலம் தவறிய மழை காரணமாக உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இயற்கையை சார்ந்து உப்பு உற்பத்தி தொழில் நடந்து வருகிறது. வெயில் அடித்தால் மட்டுமே உப்பு உற்பத்தி செய்ய முடியும். 10 நாட்கள் தொடர்ந்து வெயில் அடித்து உப்பு உற்பத்தி செய்து, அதனை பாத்தியில் தயார் செய்து வைத்தால் மறுநாள் மழை வந்து உப்பை கரைத்து விடுகிறது. அதே நேரத்தில் தரமான உப்பும் உற்பத்தி செய்ய முடியாததால் உப்பள தொழிலை நம்பி உள்ள உப்பு வியாபாரிகள், உப்பு வாருவோர், பண்டல் கட்டுவோர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி வட்டாரத்தில் சுமார் 17 முதல் 18 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். கடந்த ஆண்டு 60 சதவீதம் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் உப்பு விலை டன்னுக்கு 4 ரூபாய் ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடி உப்பு சந்தையையும் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என்கிறார்.
அதே நேரத்தில் உப்பள தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மழை பெய்வதால் தொழிலும் இல்லாத நிலையில் உள்ளனர். இன்னும் வெயில் அடித்து மீண்டும் உப்பள பாத்தியை சீர்ப்படுத்த வேண்டியிருப்பதால் வேலை இழந்து நிற்கும் இவர்கள், கடந்த ஆண்டில் புதிதாக பதவியேற்ற திமுக அரசு உப்பள தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழஙகும் என்ற அறிவிப்பு வந்தது, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து நன்றியும் தெரிவித்தோம்.
பட்ஜெட்டிலாது சொல்லுவாகன்னு பார்த்தோம் இதுவரை சத்தமே இல்லை, இருந்தாலும் இதனை நம்பி இந்தா வந்துடும் அந்தா வந்துடும்னு எதிர்பார்த்துட்டே இருக்கோம், இன்னும் ஓரிரு மாதம் தான் வேலை இருக்கும். கடந்தாண்டு நிவாரணத்தை இப்போதாவது கொடுத்தால் குடும்பத்தை நடத்தலாம் எனக்கூறும் இவர்கள் அடுத்த மழைக்காது நிவாரணம் வருமான்னு தெரிலை என்றார்.