தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரூ.87 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






கூட்டத்தில் அதிமுக கொறடா மந்திடமூர்த்தி பேசும் போது, எனது வார்டை மது இல்லா வார்டாக மாற்றும் வகையில் இரு மதுக்கடைகளை மூடவேண்டும், மதுவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க வார்டு தோறும் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும். திமுக மாமன்ற உறுப்பினர் சுரேஷ் பேசும்போது, தூத்துக்குடி பழைய மாநகரர்டசி வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி, முன்னாள் நகரசபை தலைவர் என்.பெரியசாமி ஆகியோரின் உருவச்சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






அதனை தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை. ஒரு மாதமாக குப்பை அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. குப்பை நகரமாக மாறி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. ஆகையால் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யர்காலனி பகுதியில் தார்சாலை, மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். அத்திமரப்பட்டி பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.







இதற்கு பதில் அளித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் பெறப்படும் கழிவுநீரை சுத்திகரித்து, அதனை தொழிற்சாலைகளுக்கு வழங்கும் பணி தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். மாநகராட்சி பகுதியில் மின்கம்பங்கள் உள்ள அனைத்து பகுதியிலும் விளக்குகள் அமைக்கப்படும்.


பாதாள சாக்கடை திட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இது தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், மாநகராட்சியின் ஆன்லைன் புகார் தளத்தில் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பகுதியில் சுமார் 400 சாலை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. 200 பணிகள் முடிக்கப்பட உள்ளன. இதனால் எந்த பகுதியிலும் மழைநீர் தேங்காது. திரேஸ்புரம் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. அதனை சரி செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. பழைய பூங்காக்கள் அனைத்து பராமரிக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கதிர்வேல் நகர் பகுதியில் 3½ ஏக்கர் பரப்பில் கிரிக்கெட் மைதானம் மற்றும் கபடி விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் அனைத்து இளைஞர்களும் சென்று விளையாடலாம் என்றார். கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.