தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் 2022-2023-ம் நிதியாண்டுக்கான செயல்பாடுகள் குறித்து, துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் (2022- 2023) 38.04 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது முந்தைய 2021-2022 நிதியாண்டில்  கையாளப்பட்ட 34.12 மில்லியன் டன் சரக்குகளை விட 11.5 சதவிகிதம் அதிகமாகும்.




இதில் இறக்குமதி 28.30 மில்லியன் டன்களும், ஏற்றுமதி 8.95 மில்லியன் டன்களும், சரக்கு பரிமாற்றம் மூலம் 0.49 மில்லியன் டன்களும் கையாளப்பட்டுள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் 2022- 2023-ம் நிதியாண்டுக்கு நிர்ணயம் செய்திருந்த அளவான 36 மில்லியன் டன் சரக்கை தூத்துக்குடி வஉசி துறைமுகம் 14.03.2023 அன்றே கடந்து சாதனை படைத்துள்ளது.




வஉசி துறைமுகத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் மொத்த வருவாய் இதுவரை கண்டிராத வகையில் ரூ.816.17 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய 2021-2022 நிதியாண்டு மொத்த வருவாய் ரூ.654.52 கோடியாக இருந்தது. இதில் வளர்ச்சி விகிதம் 25 சதவீதம் ஆகும். 2022-2023 நிதியாண்டு இயக்க வருவாய் ரூ.733.27 கோடி ஆகும். முந்தைய 2021-2022 நிதியாண்டு இயக்க வருவாய் ரூ.596.81 கோடியாக இருந்தது. இதில் வளர்ச்சி விகிதம் 23 சதவீதமாகும். 2022-2023 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.256.14 கோடி ஆகும். முந்தைய 2021-2022 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.136.80 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டைவிட நிகர வருவாய் 87 சதவீதம் அதிகமாகும். இயக்க விகிதாச்சாரம் 41 சதவீதமாக அதிகரித்துள்ளது (41 பைசா செலவுக்கு 1 ரூபாய் வருமாய்).




வஉசி துறைமுகத்தில் 2022- 2023-ம் நிதியாண்டில் ரூ.42 கோடியில் சரக்கு பெட்டகங்களை கண்காணிக்கும் வசதி, ரூ.16 கோடியில் நிலக்கரி சேமிப்பு கிடங்கை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ.434.17 கோடியில் 9-வது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றுதல், ரூ.16.39 கோடியில் துறைமுக நுழைவு வாயிலை அகலப்படுத்தும் பணி, ரூ.265.15 கோடியில் 3-வது வடக்கு சரக்கு தளத்தை இயந்திரமாக்குதல் பணி, ரூ.26 கோடியில் 2 மெகாவாட் காற்றாலை நிறுவுதல், ரூ.16 கோடியில் தரைதள சூரியமின் ஆலை நிறுவுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.




காற்றாலை மற்றும் தரைதள சூரியமின் ஆலை பணிகள் வரும் மே மாதம் முடிவடையும். அப்போது தூத்துக்குடி வஉசி துறைமுகம் 100 சதவீத பசுமை துறைமுகமாக மாறும். துறைமுகத்தின் அனைத்து மின் தேவைகளும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்படும் என்றார்.பேட்டியின் போது துறைமுக போக்குவரத்து மேலாளர் ஆர்.பிரபாகர், தலைமை இயந்திரவியல் பொறியாளர் சுரேஷ் பாபு, நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி சாகு, துணை பாதுகாவலர் பிரவின் குமார் சிங், மூத்த துணை தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.