தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்களுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆலோசனை குழு தலைவர் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் விமான நிலைய வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் சரவணன் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் ஓடுதளத்தை மேலும் நீட்டிக்கும் பணியும், அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. மேலும், புதிதாக முனையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிந்து விடும் என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்து உள்ளார். இதனால் விரைவில் தூத்துக்குடி விமானநிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
விரிவாக்கப் பணிகள் முடிவுற்றதும் சரக்கு விமான போக்குவரத்து, பெரிய வகை பயணிகள் விமான போக்குவரத்து தொடங்கப்படும். இரவு நேரத்தில் விமான போக்குவரத்து சேவை தொடர்பான அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. ஓடுதளத்தில் மட்டும் கொஞ்சம் பணிகள் மீதம் உள்ளன. அந்த பணிகளை இரவு நேரத்தில் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் 6 மாதத்தில் அந்த பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இருப்பினும், 4 மாதத்துக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு விரைவில் இரவு நேர விமான சேவை தொடங்கப்படும் என்றார்.
மேலும் அவர் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு உதவக்கூடிய கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு பேசுகிறார். தமிழக அரசு சார்பில் பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர்.
இதில் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். உயர்கல்விக்கான வாய்ப்புகளை மாணவர்கள் அறிந்து கொண்டால், உயர்கல்வியை தேர்வு செய்வது எளிதாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1500 மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எத்தனை மாணவர்கள் வந்தாலும அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்