நெல்லை மாவட்ட பேரிடர் கால கண்காணிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார்,
குறிப்பாக நெல்லை டவுண் நயினார்குளம் சாலை, மனக்காவலம் பிள்ளை நகர் கால்வாய், தற்காலிக புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறும் பொழுது,
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்து வருவதாகவும், மழை நேரத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் செல்லாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் நடந்து வருவதை நேரில் பார்வையிட்டுள்ளேன்,
நெல்லை மாநகரத்தில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க 95 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் அதிக கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார், கனமழை பெய்தால் சாலை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடைபடாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து எடுக்கபட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்ப 17,719 பேருந்துகள் இயக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, சென்னையில் அதிக கனமழை பெய்துள்ளதால் இருதினங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் சிறப்பு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் பெய்யும் கனமழை காரணமாக தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் வந்து மீண்டும் பணி செய்பவர்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் இருப்பவர்களின் தேவைக்கு ஏற்ப மீண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும், தமிழகத்தில் ஆயிரத்து 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, பண்டிகை காலத்தை பயன்படுத்தி விதிமுறை மீறல் செய்த 7 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ஆம்னி பேருந்துகள் தொடர்பாக புகார் அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், பேரிடர் காலத்தில் பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரும் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் மத்திய மாவட்ட செயலாளருமான அப்துல் வஹாப், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ எல் எஸ் லட்சுமணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்