திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அதன் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள ஒப்பந்த புள்ளி கோரும் அறிவிப்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை ஏற்பாடு செய்ய தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணு டெண்டர்கள் வரவேற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒப்பந்த விவரம், மண்டலம், ஒப்பந்தப்புள்ளி வழங்கும் நாள் மற்றும் நேரம், ஒப்பந்தப்படிவம் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் மற்றும் நேரம், ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாள் மற்று நேரம், ஒப்பந்தப்புள்ளி பெறப்படும் நாள் மற்றும் நேரம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதில் இந்த டெண்டர்களை 17.06.2024 காலை 11 மணி முதல் ஒப்பந்த புள்ளி திருநெல்வேலி, தூத்துக்குடி ரோடு, வி.எம் சத்திரம் தமிழக அரசு போக்குவரத்து துறை அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும் இந்த ஒப்பந்த படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 18/7/2024 அதாவது ஜூலை 18-ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்த புள்ளிகள் ஜூலை 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு மைய அலுவலகத்தில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்தங்களை இலவசமாக www.tntenders.gov.in   என்ற தமிழக அரசின் டெண்டர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படும் ஒப்பந்தப்புள்ளிகள் மட்டுமே ஏற்கப்படும். எவ்வித முன்னேறிவிப்பின்றி ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்யவோ அல்லது தள்ளுபடி செய்யவோ தநாஅபோக (திலி ) நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களை தனியார் வசம் கொடுக்கக் கூடாது என தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் சங்கங்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு திருநெல்வேலி மண்டலத்திலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இடையே கடும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் 30 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலாளிக்கு ஓய்வு பெறும் நாளிலேயே பணி பண பலன்கள் எதையும் கொடுக்க முடியாத நிலையில் தவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் திருநெல்வேலி மண்டலம் அரசு போக்குவரத்துத்துறை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான தனியார் அமைப்புகளை சார்ந்த நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த புள்ளி கோரி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு பேருந்துகளை இயக்க ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை நியமிக்க வழிவகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசு போக்குவரத்து தொழிலாளிகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதுடன் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலை என்பது இனி கனவாகதான் இருக்கும். எனவே தொழிலாளர் விரோத போக்கினை மேற்கொள்ளும் தமிழக அரசு போக்குவரத்துதுறைக்கு தொழிற்சங்கங்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.