நெல்லை மாவட்டம் களக்காடு ஓன்றியம் கீழ கள்ளிகுளம் பஞ்சாத்து மீனவன்குளத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி,  இவருக்கு வயது 70, அப்பகுதியில் தனியாக வசித்து வரும் இவர் குளத்து வேலைக்கு சென்று அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் 2015 ஆம் ஆண்டு அங்குள்ள துவக்கப் பள்ளியில் சமையலராக பணியாற்றி உள்ளார், பின்னர் 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரை 100 நாள் வேலை திட்டத்தில் மூன்று ஆண்டுகள் சம்பளம் பெற்று உள்ளார். வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் இந்த தொகை மொத்தமாக 80 ஆயிரம் ரூபாய் சேமித்து வைத்து உள்ளார். பின்னர் 2019-20 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் போடப்பட்டு உள்ளது. பின்னர் அதனை காண்பித்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வங்கி அக்கவுண்ட்டில்  பணம் வரவு வைக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 1,75000 ஆயிரம் ரூபாயும்,  80 ஆயிரம் ரூபாயும் சேர்ந்து வங்கி கணக்கில் 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் இருந்து உள்ளது.




இந்த சூழலில் கள்ளிகுளம் பஞ்சாயத்து க்ளர்க் முத்துக்குமார் என்பவர் பாட்டியின் வங்கி புத்தகத்தை வாங்கி வைத்து கொண்டு வீடு கட்டும் திட்டத்திற்காக என கூறி அவ்வப்போது கைரேகை வாங்கி உள்ளார். அதனை வைத்து அவ்வப்போது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து உள்ளார். பின்னர் ஊர் மக்கள் உதவியுடன் வங்கி வரவு செலவு பதிவுகளை பதிவிட்டு வாங்கி உள்ளார். தற்போது வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் அவர் கையாடல் செய்து 499 ரூபாய் மட்டுமே இருந்து உள்ளது, இது குறித்து கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என மறுப்பு தெரிவித்து  உள்ளார். இதனால் விரக்தி அடைந்த 70 வயது பெண்மணி ஊர்மக்களுடன் சேர்ந்து வந்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்,




அப்போது அவர் கூறும் பொழுது, குளத்தில் மண் வெட்டும் வேலைக்கு சென்று சேர்ந்த காசையும், அரசு திட்டத்தில் வீடு கட்டி தருவதாக கூறி வங்கியில் வரவு வைக்கப்பட்ட காசையும் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பஞ்சாயத்து கிளார்க் கைநாட்டு பெற்று கொண்டு ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கு ஆட்சியர் உதவி செய்து அப்பணத்தை மீட்டு தருவதுடன் வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கூறினார்.




ஊர் பொதுமக்கள் கூறும் பொழுது, படிப்பறிவில்லாத பாட்டியை பஞ்சாயத்து கிளார்க் ஏமாற்றி பணத்தை அபரித்து உள்ளார். இது அதிகாரிகளின் துணையோடு நடந்து உள்ளது. வணக்கம் நெல்லை மூலம் ஆன்லைனில் இதற்கு முன்னர் புகார் அளித்தோம்,  ஆனால் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதால் நேரடியாக ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர்.


இந்த குற்றச்சாட்டு குறித்து பஞ்சாயத்து கிளார்க் முத்துக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பின்னர் தொடர்பு கொண்டு பேசுகிறேன் என  குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். இதன் உண்மை தன்மையை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர்  உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.