நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த சுபாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்ற எண் 01/2023படி 323, 324,326, 506/1 ஆகிய 4 பிரிவுகள்ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கொடுத்த புகார் மனுவில் ஏஎஸ்பி விசாரணைக்கு அழைத்து சென்ற மற்ற காவலர்கள் உதவியுடன் எனது மற்றும் நண்பர்களின் பற்களை கொடூரமான முறையில் பிடுங்கி சித்தரவை செய்ததாக குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக, புகார் மனு கொடுத்த இளைஞர் சுபாஷ் மாவட்ட குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்ரகு முன்னிலையில் ஆஜராகி உள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த அமுதா IAS தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை இரண்டாம் கட்டம் 17 மற்றும் 18 திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடைபெற்றது. அதன்படி திங்கட்கிழமை நடைபெற்று முடிந்துள்ள இரண்டாம் கட்ட விசாரணையின் முதல் நாளில் சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, இரண்டு சிறார்கள், அவர்களது தாயார் ராஜேஸ்வரி மற்றும் தனலட்சுமி, ராஜேஸ்வரியின் கணவர் கண்ணன், கணேசன், அருண்குமார் என 8 பேர் மதியம் வரை ஆஜராகினர். மதியத்திற்கு மேல் வழக்கறிஞர் மகராஜன் உடன் செல்லப்பா, E.மாரியப்பன், சுபாஷ், M.மாரியப்பன் இசக்கிமுத்து, வேத நாராயணன் என ஆறு பேர் விசாரணைக்கு வந்தனர். இதனால் இரண்டாம் கட்ட விசாரணையும் முதல் நாளில் 14 பேர் ஆஜராகி இருந்தனர்.
இதில் முதலில் வந்த 8 சாட்சிகளிடம் விசாரணை முடிய இரவானது. இதனை தொடர்ந்தும் நடைபெற்ற விசாரணையில் மகாராஜன் உடன் வந்த ஆறு பேரில் மூன்று பேர் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதன்படி முதல் நாளில் ஆதரான 14 பேரில் 11 பேரிடம் விசாரணை நடைபெற்று முடிந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரை 14 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இதனை அடுத்து காத்திருக்கும் மூன்று பேருக்கு செவ்வாய்கிழமை விசாரணை நடைபெற்றது. முன்னதாக சார் ஆட்சியர் விசாரணையில் பிறழ் சாட்சியாக மாறிய சூர்யா வீடியோ கால் மூலம் ஆஜராகி காவல்துறையால் பாதிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். மொத்தமாக 15 பேரிடம் விசாரணையானது நடைபெற்ற நிலையில் விசாரணையை முடித்த அமுதா ஐஏஎஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..