அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிபிசிஐடி போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  பாதிக்கப்பட்ட நபரான அம்பாசமுத்திரம் அடையகருங்குளத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரின் தரப்பினர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.


இதையடுத்து அருண்குமாரின் சகோதரரான 17 வயது சிறார், அவரது தாயார் ராஜேஸ்வரி, தந்தை கண்ணன் ஆகியோர் தங்களது தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன் என்பவருடன்  சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களது கருத்துக்களை அறிக்கையாக கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டு நடைபெற்ற விசாரணைக்கு ஆஜராகாமல் எழுந்து வெளியேறினர்.


இதனைத்தொடர்ந்து அருண்குமார் தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "குற்றம் செய்யப்பட்டவர் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் வழக்கு பதிவு செய்துள்ள நிலையிலும் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு அச்சுறுத்தலோடு இருந்து வருகிறார்கள். பெங்களூரில் வேலை பார்க்கும் பாதிக்கப்பட்ட நபருக்கு 5-ம் தேதி ஆஜராக 3-ந்தேதி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் நிலையில் அவருடைய நிலையிலிருந்து மேல் அதிகாரியாக இருக்கும் ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி.யை விசாரணையை மேற்பார்வை செய்யும் அதிகாரியாக நியமிக்க வேண்டும்.


டி.எஸ்.பி தலைமையில் விசாரணை என்பது சரியானதாக இருக்காது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் தான் உண்மை நிலை வெளிவரும். சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர் தான் பலர் சாட்சியம் அளித்தனர். உண்மை சம்பவங்கள் வெளியே வந்தது. ஐபிஎஸ் அத்தாரி மீது கைது நடவடிக்கை இருந்தால் தான் துணிச்சலுடன் வெளிவந்து தங்களது தரப்பு வாதங்களை  பாதிக்கப்பட்ட தரப்பினர் சாட்சியம் அளிப்பார்கள். இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய உயர் அதிகாரியை கண்டிப்பாக நியமனம் செய்ய வேண்டும்.


நீதித்துறை மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பும் ஐபிஎஸ் அதிகாரிக்கு இந்த விவகாரத்தில் ஆதரவாக செயல்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவ பரிசோதனை குறிப்பை கேட்டு அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் கேட்டால் தர மறுக்கிறார்கள். அனைத்து துறையும் சேர்ந்து கூட்டாக சேர்ந்து ஐபிஎஸ் அதிகாரியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்ற அச்சம் எழுகிறது.இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். இதுவரை மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் மேலும் இந்த விவகாரத்தில் பல புகார்கள் பல வழக்குகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெறுவது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நம்பிக்கை இல்லை என கருதுகிறார்கள். பாதிக்கப்பட்ட தரப்பை சார்ந்த ஒருவருக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று ஆஜராகிய நபர்கள் சாட்சியம் அளிக்கவில்லை என தெரிவித்தார்