நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம் சேர்வலாறு அணைகள் நிரம்பி  உபரி நீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டு வருகிறது, நேற்று இரவு நிலவரப்படி இரண்டு அணைகளுக்கும் வினாடிக்கு 13, 500 கனஅடி  வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதேபோன்று  தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள கடனாநிதி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்த நிலையில் அங்கிருந்து 3000 ஆயிரம்  கனஅடி நீர் வரை தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், காற்றாட்டு வெள்ளம் என 20 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் செல்வதால் இன்று 5வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. வெள்ளநீர் ஆற்றங்கரைப்பகுதியில் உள்ள கோவில்கள், கல்மண்டபங்கள், தரைப்பாலங்கள் ஆகியவற்றை மூழ்கடித்துச் செல்கிறது.



அதிகபட்சமாக மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் 91 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. சேர்வலாறு பகுதியில் 71 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு பகுதியில் 84 மில்லி மீட்டரும், அம்பாசமுத்திரம் பகுதியில் 83 மில்லி மீட்டரும் , சேரன்மகாதேவியில் 58 மில்லி மீட்டரும், நாங்குநேரி பகுதியில் 53 மில்லி மீட்டரும் , களக்காடு பகுதியில் 53 மில்லி மீட்டரும்  மழை பதிவாகியுள்ளது. மழை தொடர்ந்து நீடித்தால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெரும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.




அதேபோல நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யா நகர், வடக்கு பாலபாக்யா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரமாக ஆயிரக்கணக்கான வீடுகளை  மழை நீர் சூழ்ந்து உள்ளது. அதனை வெளியேற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். இதே போல் நெல்லை மாவட்டத்தில் டவுண் காட்சி மண்டபம், உட்பட்ட மாநகராட்சி தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது,




பாபநாசம் வனப்பகுதியில் இருந்து 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இறந்த நிலையில்  அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு பகுதியில் கரை ஒதுங்கியது. இதனை கண்ட பொதுமக்கள் அம்பாசமுத்திரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனை செய்து மணிமுத்தாறு அருகே காட்டுப்பகுதியில் சிறுத்தையின் உடலை எரியூட்டினர் . மேலும் இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுத்தை இயற்கை சீற்றத்தில் உயிர் இழந்ததா, இல்லது வேட்டையாடப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்,  




நெல்லை டவுண் கோடீஸ்வரன் நகர் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக உள்ள சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. இதன் காரணமாக திருநெல்வேலியில் இருந்து டவுண் கோடீஸ்வரன் நகர், பேட்டை வழியாக பாபநாசம், சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கூடிய போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வந்தது.  சம்பவ இடத்திற்கு பேட்டை காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதியத்திற்கு மேல் மரம் சாலையில் இருந்து அகற்றப்பட்டதால் அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து சேவை துவங்கியது, 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.