நெல்லையில் மாணவர்களுக்கிடையே தொடர்ச்சியாக மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக  நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே புதூரில் இயங்கி வருகிறது கிங்ஸ் மெட்ரிக் பள்ளி. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வரும் நிலையில் நேற்று முன் தினம் பள்ளியில் மாணவர் பேரவை தலைவர் தேர்தல் நடந்ததாக தெரிகிறது. இதில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆதிதிராவிட மாணவர் ஒருவர் மீது மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் தாக்குதல்  நடத்தியதாகவும் கூறப்படுகிறது.


இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் காயமடைந்த மாணவன் மற்றும்  தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான மாணவன் இராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பாக தகவலறிந்த வள்ளியூர் காவல்துறையினர் பிரச்சினையில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் அதன்படி பிரச்சினையில் ஈடுபட்ட 7 மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 7 மாணவர்களில் 6 மாணவர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.  ஏழு பேரில் 1 மாணவன் தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளரின் மகன் என்பதால் அந்த மாணவன் மீது மட்டும் நடவடிக்கை இல்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது தனியார் பள்ளியிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஓராண்டில் வள்ளியூரில் மட்டும் மூன்றாவது சம்பவமாக பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதே போல கடந்த ஜூலை தொடங்கி தற்போது வரை 3 வது சம்பவமாக மாணவர்களுக்கிடையே மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நெல்லை மாவட்டம் நாகர்கோவில் செல்லும் சாலையில் பொன்னாக்குடி அடுத்துள்ளது மருதகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும்  அரசு உயர்நிலைப்பள்ளி படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பு மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அதே போல கடந்த 2 ஆம் தேதி நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் உட்கோட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்திய கடற்படை வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஒன்பதாவது வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை சக மாணவர் மீது சிந்திய நிலையில் வகுப்பில் சிறு தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த மாணவரை மற்றொரு மாணவர் அரிவாளை கொண்டு சென்று தாக்கினார். இந்த நிலையில் தற்போதைய சம்பவமாக மாணவர் பேரவை தலைவரை தேர்ந்தெடுப்பதில் மோதல் ஏற்பட்டு ஆதி திராவிட மாணவர் மீது  மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் சாதி ரீதியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பெற்றோர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.