நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14-ஆம் தேதி நள்ளிரவில் கல் சரிந்து விழுந்ததில் 6 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர், இதனையடுத்து இதில் முருகன், விஜய் ஆகிய இரண்டு பேர் 15 ஆம் தேதி உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தொடர்ந்து 18 மணி நேர போராட்டத்திற்கு பின் செல்வம் என்பவர் மீட்கப்பட்டார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்கும் பணி இன்று இரண்டாவது நாளாக நேற்று நடந்து வந்தது, இதில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் மற்றும் சுரங்கத்துறை நிபுணர்களும் ஈடுபட்டனர். திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மீட்புப்பணி தொடங்கி நடந்து வந்தது, மதியம் சுமார் 1.45 மணி அளவில் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் ஒருவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
உடலை மீட்க முயற்சித்தபோது மீண்டும் கற்கள் சரிந்து விழுந்ததால் 2 மணி நேரம் மீட்பு பணி நிறுத்தப்பட்டது, பின்னர் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரியின் அருகில் ஈடுபாடுகளில் சிக்கி கிடந்தவரை இரவு 10.45 மணி அளவில் 47 மணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்டனர்.
அவரை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டிய நிலையில் நான்காவதாக சடலமாக மீட்கப்பட்டவர் பெயர் முருகன் என்பதும் நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் லாரி கிளீனராக வேலை செய்துவந்ததும் தெரியவந்தது. மீட்கப்பட்ட அவரது உடலை உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முருகன் உடல் மீட்கபட்டதுடன் மீட்பு பணி முடித்துக் கொள்ளப்பட்டு மீண்டும் காலையில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள லாரி ஓட்டுனர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் பணி மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது,
இதற்காக கூடங்குளம் பகுதியில் இருந்து ராட்சத கிரேன் கொண்டு வரப்படுகிறது. அந்த கிரேனில் கட்டப்பட்டுள்ள இரும்புச் சங்கிலி மூலம் கீழே பாறை குவியலுக்குள் சிக்கி இருக்கும் ஹிட்டாச்சி வாகனங்களை மீட்கும் பணி முதலில் நடைபெறும். இதனை தொடர்ந்து மெக்கானிக் டீம் கீழே அனுப்பப்படுவார்கள். அவர்கள் அந்த கிட்டாச்சி இயந்திரத்தை சரி செய்து இயக்கி அதன் மூலம் கற்களை ஒதுக்கி தேடப்பட்டு வரும் இரண்டு நபர்களை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் டிப்பர் லாரியை மீட்டு அதில் டிரைவர் இருக்கலாம் என்ற அடிப்படையில் மீட்பு பணியை திட்டமிட்டுள்ளோம் என காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் இன்றைய மீட்பு பணி குறித்து தெரிவித்தார். மேலும் இன்றைய நாளில் பாறைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் மீண்டும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மண்ணியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, அடுத்தடுத்து மீட்புப்பணி தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது, மேலும் குவாரியில் சிக்கியுள்ள இருவரின் நிலை கேள்விக்குறியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இச்சூழலில் காயமடைந்த இருவருக்கும் தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டு அதனை அவர்களிடம் நேற்று அதிகாரிகள் கொடுத்துவிட்டு நலம் விசாரித்து சென்றனர், இந்த நிலையில் உயிரிழந்த ஆயர்குளத்தை சேர்ந்த முருகன் மற்றும் நாங்கு நேரி இளையார்குளத்தைச் சேர்ந்த செல்வன் ஆகிய இருவரது குடும்பத்திற்கு தனது ஆழந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்த தமிழக முதல்வர் இருவரது குடும்பத்திற்கும் தமிழக அரசின் சார்பில் தலா 10 லட்சம் ரூபாயும், தொழிலாளர் நல வாரியம் மூலமாக 5 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்,