நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே ஊருக்குள் புகுந்த கரடி பெண்ணை கடித்ததால் பரபரப்பு

கரடி கடித்த லட்சுமியை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Continues below advertisement

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். இங்குள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும், இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அதனை வனத்திற்குள் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் விளை நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து விடுவதை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுபன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களிலும் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. 

Continues below advertisement

இந்நிலையில் இன்று அதிகாலை அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பகுதியில் கரடி ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. பின்னர் அந்த கரடி பெரிய பள்ளிவாசல் சின்ன பள்ளிவாசல் தெரு மற்றும் வீரப்பர் தெரு முதலியபுரம் வழியாக சென்றுள்ளது. இதனை பார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள் கரடியை விரட்டி அடித்துள்ளனர். அப்போது ஓரமாக நின்று கொண்டிருந்த லட்சுமி என்ற பெண்ணின் கையில் கரடி கடித்துள்ளது. மேலும் சாலையில் இருந்த வாகனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர்  நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியை தேடி வருகின்றனர். மேலும் கரடி கடித்த லட்சுமியை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் வனத்துறையை சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் இரவு 2 குட்டிகளுடன் கரடி ஒன்று விக்கிரமசிங்கபுரம் அருகில் உள்ள கோட்டை விளைப்பட்டி மற்றும் சங்கரபாண்டியபுரம் இணைப்பு சாலையில் உள்ள தீரன் சுடலைமாடசுவாமி கோவில் பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அதே போன்று கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அதேபகுதியில் பெண் ஒருவர் அதிகாலையில் கரடியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு சிவந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் இரவு நேரங்களில்  கரடி சுற்றி திரிந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பையும் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியது. அதேபோல கடந்தாண்டு ஆழ்வார்குறிச்சி அருகே இருவரை கரடி மிக கொடூரமாக கடித்து குதறியது. தொடர்ந்து அடுத்தடுத்து கரடி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதால் மலையடிவார மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola