நெல்லையில் தொடங்கிய பறவைகள் கணக்கெடுக்கும் பணி..கண்ணில் தென்படுகிற பறவைகளை க்ளிக் செய்த வனத்துறை

இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் எத்தனை பறவைகள் உள்ளன என்பது குறித்தும், அரிய வகை பறவைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பர்

Continues below advertisement

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் குளக்கரைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். வற்றாத ஜீவ  நதியான தாமிரபரணி, அதன் துணையாறுகள் மற்றும் பாசனக்குளங்கள் மூலம் நெல்லை, தென்காசி,தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் செழிப்புறுகின்றது. இந்த பாசனக்குளங்களில் எண்ணற்ற நீர்வாழ் பறவைகள் குறிப்பாக குளிர் காலங்களில் இக்குளங்கள் பறவைகளுக்கு புகலிடமாக திகழும், இக்காலங்களில் வெளியூர்களில் இருந்தும் வலசை வரும் பறவைகள் இங்கு கூடு கட்டி குஞ்சு பொறித்து தன் இனத்தை பெருக்கிக் கொள்ளும். இவ்வாறு வரும் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பது உண்டு, அதன்படி இதுவரை நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

அதன்படி இந்த ஆண்டும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்றும் நாளையும் நடைபெறும் என நெல்லை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முருகன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் தமிழ்நாடு வனத்துறை  மூலம் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், காடன்குளம், திருப்புடைமருதூர் பறவைகள் காப்பகம், அரமண நேரி, இராம நேரி, டானார் குளம், சிலையம், விஜய நாராயணம், வேய்ந்தான்குளம், நயினார் குளம், வண்ணாமாசேரி, பாலாமடை, ராஜவல்லிபுரம், குப்பக்குறிச்சி, கல்குறிச்சி, கண்டியப்பேரி, கங்கை கொண்டான், சாரல்குளம், முக்கூடல், பிராஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு குளங்களிலிம் அதே போல தென்காசியில் உள்ள குளங்களிலும் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தெரிவித்திருந்தார்.


இச்சூழலில் நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி பகுதியில் உள்ள குளங்களில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது. இதில் திருக்குறுங்குடி வனத்துறை சார்பில் திருக்குறுங்குடி பெரியகுளம், மலையடிபுதூர், செங்களாகுறிச்சி, வடுகச்சிமதில், சூரங்குடி ஊச்சிகுளம் உள்ளிட்ட ஆறு கிராமங்களில் உள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 30க்கும் மேற்பட்டோர் கண்களில் தென்படுகிற அனைத்து பறவைகளையும் தொலைநோக்கி கருவியுடன் புகைப்படம் எடுப்பதுடன் அதனை படமாகவும் பதிவு செய்தனர் . 

தொடர்ந்து நாளை ரோஸ்மியாபுரம், கொடுமுடியாறு அணை, வள்ளியூர் குளம், கேசவனேரி குளம், ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் எத்தனை பறவைகள் உள்ளன என்பது குறித்தும், அரிய வகை பறவைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று பறவைகள் கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர்.

Continues below advertisement