நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தேர்தல் காரியாலயம் திறப்பது, வேட்பாளர்களை அறிவிப்பது என தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் துவக்கியுள்ளது. குறிப்பாக ஆளும் மாநில, மத்திய அரசுகள் அதிக முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி நெல்லையில் பாஜக சார்பில் தேர்தல் பணிகள் மிக விரைவாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை பாஜக சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியா என கேட்டதற்கு கட்சி அறிவிக்கும் என தெரிவித்தார். கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் தேதி என எதுவுமே அறிவிக்கப்படாத நிலையில் அவர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தது நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிட விரும்புவதாக கூறப்பட்டது.
மேலும் பாஜக தலைமையும் இவருக்கு தான் திருநெல்வேலியில் வாய்ப்பு கொடுக்கும் எனவும் சொல்லப்பட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் கட்சி தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பே தாமாக முந்திக் கொண்டு நல்ல நாள் பார்த்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது நம்பிக்கைபடியே கட்சி அவருக்கு வாய்ப்பும் கொடுத்தது. எனவே இந்த முறையும் எப்படியும் தனக்கு எம்பி சீட் கிடைத்து விடும் என்பதில் நயினார் நாகேந்திரன் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற சூழலில் தற்போது நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்பி சீட் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் எஸ்.ராஜா சார்பில் நெல்லை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் புறக்கணிக்காதே! புறக்கணிக்காதே! வெள்ளாளர்களை புறக்கணிக்காதே! பெரும்பான்மையாக வாழ்கின்ற வெள்ளாளர்களை பாஜக புறக்கணிக்கிறதா? எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்பி சீட்டா? வெள்ளாளர்களே விழித்துக்கொள். திருநெல்வேலி எம்பி தொகுதியில் எங்கள் சமூக வேட்பாளரை பாஜக நிறுத்த வேண்டும். இல்லையேல் படுதோல்வியை பாஜக சந்திக்கும். எச்சரிக்கிறோம்....! என குறிப்பிட்டுள்ளார். சீட் கிடைக்கும் நம்பிக்கையில் தேர்தல் அலுவலகம் திறந்த சில நாளிலையே நயினார் நாகேந்திரனுக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.