நெல்லை மாவட்டம் கீழ குன்னத்தூர் சார்ந்த விவசாயிகள் முருகன்(வயது 72), ஆறுமுகவேல் (வயது 54), மற்றும் ரவி (வயது 44). இவர்கள் மூவரும்  நெல்லை டவுணில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா டிரேடர்ஸ் என்ற கடையில் டீலக்ஸ் பொன்னி என்ற நெல் விதையை  கடந்த 25.10.19 அன்று  பணம் கொடுத்து வாங்கி உள்ளார்கள். டீலக்ஸ் பொன்னி விதையை வாங்கிச் சென்று நிலத்தில் விதைத்து உள்ளனர். ஆனால் நெல்லானது நேராக வளராமல் நெட்டை, குட்டையாக வளர்ந்து உள்ளது. மேலும் ஏக்கர் ஒன்றிற்கு 26 மூடைகள் மகசூல் குறைந்துள்ளது. இதுகுறித்து நெல் விதைகள் வாங்கிய இடத்தில் கேட்டதற்கு அவர்கள் பொறுப்பேற்க முடியாது என கூறி அனுப்பியுள்ளனர். மகசூல் கிடைக்காமல் இருந்ததால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான நுகர்வோர்கள் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் ஸ்ரீ கிருஷ்ணா டிரேட்ர்ஸ் விற்பனை செய்த நெல்லின் விதை கலவையாக இருந்ததால்  மகசூல் கிடைக்காமல் மிகப்பெரிய நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ணா டிரேடஸ் செய்த சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வாணிப்பத்தால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேட்டு வழக்கறிஞர் பிரம்மா மூலம் 25.02.20 அன்று வழக்கு தாக்கல் செய்தனர். 


வழக்கை விசாரணை செய்த நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தலைவர் கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் கனக சபாபதி ஆகியோர் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் மூன்று பேருக்கும் சேர்த்து ( முருகனுக்கு நஷ்ட ஈடு  ₹40,000/- மற்றும் வழக்கு செலவு ₹5000// ,ஆறுமுகவேல் ₹70,000 + ₹5000/- ரவி ₹80,000/+₹ 5,000//)டிரேடர் மற்றும் விதைபண்னை உற்பத்தியாளர் சேர்ந்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ கிருஷ்ணா டிரேடர்ஸ் மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் மதுரையில் (சுற்று ) வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.


அந்த வழக்கானது தற்போது விசாரணைக்கு வந்த நிலையில், விவசாயிகள் மூவரும் நேரடியாக ஆஜராகி அவர்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்துள்ளனர்.  இதனை கேட்ட மதுரை மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய சேர்மன் கருப்பையா பிறப்பித்த உத்தரவில் மூவருக்கும் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவு சேர்த்து ரூபாய் 2,05,000/-ம் வழங்க நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தனர். மேலும்   விவசாயிகள் மூவருக்கும் தலா ரூபாய் பத்தாயிரம் டிரேடர்ஸ் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததோடு ஸ்ரீ கிருஷ்ணா டிரேடர்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. தரமற்ற விதைகளை விற்பனை செய்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தனியார் நிறுவனம் மீது நுகர்வோர்  நீதிமன்றம் இது போன்ற அதிரடி உத்தரவை பிறப்பித்திருப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.