நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, கரடி, யானை, மான், மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. குறிப்பாக இவை தற்போது இரை தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகி வருவதோடு ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவது, ஆடு, மாடுகளை மற்றும் பொதுமக்களை தாக்குவது என அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தையொட்டிய பகுதியில் அமைந்துள்ளது விக்கிரமசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார கிராமங்களான முதலியார்பட்டி, தட்டாம்பட்டி, மற்றும் அருணாச்சலபுரம், கோட்டைவிளைப்பட்டி போன்ற கிராமங்கள். இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயமே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலையையொட்டிய இந்த பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தைகள், கரடிகள் போன்றவை ஊருக்குள் நுழைந்து வீட்டில் கட்டி வைத்திருக்கும் விலங்குகளை வேட்டையாடி வருவதோடு, பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது.
குறிப்பாக விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள அருணாச்சலபுரம் என்ற கிராமத்தில் நேற்றிரவு கரடி ஒன்று உலா வந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் இரவு கோட்டைவிளைபட்டி நடுத்தெருவிலுள்ள குமார் என்பவரின் வீட்டில் முன்பகுதியில் இரண்டு கரடிகள் ஜோடியாக சுற்றி திரிந்தது. அந்த வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு முதலியார்பட்டியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மெயின் சாலையில் ஒற்றை கரடி ஒன்று உலா வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வழியாக செல்லும் பயணிகள், மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் மக்களை இந்த சாலையில் கரடி நிற்கிறது. பார்த்து வாருங்கள் என்று சத்தம் எழுப்பி எச்சரிக்கை விடுத்தனர். பின் அங்கிருந்த கரடி சாலையில் இருந்து தெரு வழியாக உள்ளே சென்றது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதலங்களில் வெளியிட்டனர். மணிமுத்தாறு பகுதியில் இரண்டு முறை கரடி மரத்தில் தஞ்சம் அடைந்த நிலையில் அதனை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் இரவில் கீழே இறங்கி சென்றது.
இதுஒருபுறமிருக்க கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டமும் இருந்து வருகிறது. தொடர்ச்சியாக 4 சிறுத்தைகளை அடுத்தடுத்து கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் அடர்வனப்பகுதியில் விட்டனர். இருப்பினும் அப்பகுதிகளில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அச்சமடைந்துள்ளனர். எனவே உடனடியாக வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து கரடியினை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு வனவிலங்குகள் ஊருக்குள் புகாத வண்ணம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.