தேசிய விடுமுறை தினத்தில் விடுமுறை வழங்காத 132 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக திருநெல்வேலி  மாவட்ட தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:


தேசிய விடுமுறை நானான 15.08.2024 சுதந்திர தினத்தன்று கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பீடி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை ஆய்வர்கள் தொழிலாளர் உதவி ஆய்வர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு முறைப்படி தகவல் தெரிவிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியிருந்தால் அந்நிறுனங்களின் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அந்த அடிப்படையில் தேசிய விடுமுறை நாளான இன்று 15.08.2024 சுதந்திர தினத்தன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டதில் 91 கடைகள் நிறுவனங்கள், 65 உணவு நிறுவனங்கள், 10 மோட்டார் நிறுவனங்கள், 35 பிடி நிறுவனங்கள் ஆக மொத்தம் 201 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 132 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என திருநெல்வேலி  மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.