நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயம் செய்து வரும் இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் பணகுடி அருகே உள்ள சைதம்மாள்புரத்தில் உள்ளது. இந்த நிலையில் இவரது தோட்டத்தில் பணகுடியை சேர்ந்த கிருஷ்ணன், கண்ணன், மகேஷ் ஆகியோர் தங்களது வளர்ப்பு ஆடுகள் 250க்கும் மேற்பட்டவைகளை அங்கு கிடை அமைத்துள்ளனர். நேற்று வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் இரவு கிடையில் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆட்டு கிடையில் 4க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் புகுந்துள்ளது. அப்போது கிடையில் இருந்த 40க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்ததில் 15க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக இறந்துள்ளது.
மேலும் 40க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் அடைந்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் ஆடு வளர்க்கும் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு ஆடு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விலை போகும் நிலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஆட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 15 ஆடுகள் பலியான நிலையில் காயமடைந்த 40 ஆடுகளில் மேலும் பல ஆடுகள் மோசமான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் கவலையடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதோடு வெறிநாய்களை பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக நாய்களின் தொல்லை தற்போது தெருவிற்கு தெரு அதிகமாகி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி குழந்தைகளும் வீட்டு முன் தெருக்களில் விளையாட அச்சமடைந்துள்ளனர். பல இடங்களில் குழந்தைகளை, பொதுமக்களை நாய்கள் கடித்து குதறிய செய்திகளும் வெளியாகி வருகிறது. எனவே பணகுடி பேரூராட்சி சார்பில் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். இருப்பினும் தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த வித முயற்சியும் எடுக்காததால் பெருகி வரும் தெரு நாய்களால் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே பணகுடி பகுதியில் மட்டுமல்ல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெருகி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.