தமிழக அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கோயம்புத்தூரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. நெல்லை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி ஏடிஎம் கார்டை வழங்கினார். நெல்லை மாவட்டத்தில் சுமார் 6361 மாணவர்கள் முதல் கட்டமாக இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


நிகழ்ச்சிக்கு பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நமது மாவட்டத்தில் 69 கல்லூரிகளில் 6361 இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் என்றார். தொடர்ந்து சமீபகாலமாக நெல்லை பள்ளிகளில் மாணவர்களினையே நடக்கும் மோதல் குறித்து கேட்டபோது, பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. ராதாபுரத்தில் ஒரு பள்ளியில் பிரச்னை செய்த மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தபோது மாணவர்களின் பெற்றோர்களும், மாணவர்களும் நாங்கள் ஒரே வகுப்பில் படிக்கிறோம், இன்று சண்டை போட்டால் நாளை சேர்ந்து கொள்வோம் பிறகு ஏன் இதனை பெரிதுப்படுத்துகிறீர்கள் என்றார்கள். எனவே இதுபோன்ற விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம், நமது மாவட்டத்தில் எங்கேயும் சாதி சண்டை இல்லை. அப்படி இல்லாததால் பள்ளியில் குழந்தைகள் சண்டை போடுவதை பெரிதாக்க பார்க்கிறார்கள், இதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்த்த போது தலைமை ஆசிரியர் முடிவு எடுக்க சொல்ல வேண்டும். மாணவர்கள் பிரச்சனையில் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமும் தலையிடக்கூடாது.  தலைமை ஆசிரியர் தான் இறுதி முடிவுடுக்க வேண்டும்.




பள்ளியில் நடந்த சம்பவங்களை அவர்களே முடிவெடுத்து கொள்வார்கள், பள்ளிக்கு வெளியே வேறு நோக்கத்தோடு பிரச்னை நடந்தால் அதில் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் தலையிட்டால் சரியாக இருக்கும். ஆசிரியர்கள் தான் குழந்தைகளை அரவணைத்து செல்ல முடியும். தவறுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மாணவர்களை தண்டிக்கலாம். இடைநீக்கம் செய்யலாம், நிரந்தரமாகவும் நீக்கலாம் என்றார். அவர்களாகவே மேல் நடவடிக்கை தேவை என மாவட்ட நிர்வாகத்திடமோ, காவல்துறையிடமோ வந்தால் தான் தலையிட வேண்டும் என்றார். தொடர்ந்து அதிமுக நிர்வாகி தொடுத்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட்டிருப்பது குறித்து கேட்டபோது, காவல்துறை அழைத்தால் விசாரணைக்கு செல்வேன். நீதிமன்றத்திற்கு சென்றால் சட்டப்படி ஆஜராகி எனது தரப்பு நியாயத்தை தெரிவிப்பேன். அதில் ஒன்றும் வருத்தமில்லை. இது நம்ம நாடு, நமது சட்டம், நமது மக்கள், நமது ஜனநாயகம். அப்பாவுக்கும் ஒன்று தான். உங்களுக்கும் சட்டம் ஒன்றுதான். எல்லோருக்கும் சமமானது சட்டம் எனவே சட்டத்தை மதித்து நடப்பேன் என்று தெரிவித்தார்.