நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் புலி, யானை, கரடி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரத்திலுள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பாபநாசம் அருகேயுள்ள கோட்டைவிளை பட்டி, அகஸ்தியர்புரம், சிவந்திபுரம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றையாகவும், ஜோடியாகவும் கரடிகள் இரவு நேரங்களில் சுற்றி திரிகின்றன. கரடிகள் இரவு நேரங்களில் உலா வரும் வீடியோக்களும் தொடர்ச்சியாக சமூகவலைத் தலங்களில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இதனால் பாப நாசம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக நேற்று இரவு கோட்டைவிளைபட்டி நடுத்தெருவிலுள்ள குமார் என்பவரின் வீட்டில் முன்பகுதியில் இரண்டு கரடிகள் ஜோடியாக சுற்றி திரிந்துள்ளன.. இந்த வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோக்களால் அப்பகுதியினர் மேலும் அச்சமடைந்துள்ளனர், ஏற்கனவே ஆம்பூர், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, மூலைக்கரைப்பட்டி என பல்வேறு இடங்களில் கரடி தாக்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பும் விடுமுறை தினத்தன்று அதிகம் சுற்றுலா பயணிகள் குவியும் மணிமுத்தாறு பகுதியில் உள்ள சாலையில் பட்டப்பகலில் நடந்து சென்ற கரடியால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த நிலையில் கரடி அங்குள்ள மரக்கிளையில் தஞ்சம் புகுந்ததோடு 15 மணி நேரம் கழித்து இரவு 1 மணிக்கு மேல் மரத்திலிருந்து கீழே இறங்கி சென்ற சம்பவமும் அரங்கேறியது. இதே போல தொடர்ச்சியாக தற்போது கரடிகள் ஊருக்குள் சுற்றி திரிவதோடு மக்களை அச்சுறுத்தி வருவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே வனத்துறையினர் கரடிகள் நடமாட்டத்தை கண்டறித்து அவற்றை கூண்டு வைத்து பிடித்து வனத்திற்குள் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.
கோட்டைவிளைப்பட்டியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த கரடி குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் அடிக்கடி கரடிகள் வந்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். வெளியில் நடமாடுவதற்கே பயமாக உள்ளது. மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் கரடி வருவதை கண்டுகொள்ளாமலே இருக்கின்றனர் எனவே வனத்துறையினர் அலட்சியம் காட்டாமல் இப்பகுதியில் கூண்டு வைத்து கரடிகளை பிடிக்க வேண்டும் என்று அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர்புரம் பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் டியூசன் முடிந்து வீடு திரும்பிய இரண்டு மாணவிகளை கரடி துரத்தியுள்ளது. இதனால் அம்மாணவிகள் கீழே விழுந்து எழுந்து சென்ற சம்பமும் நடந்துள்ளது. அதே போல அப்பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கூறுவன் பொழுது, மாணவிகளை கரடி துரத்திய சம்பவத்திற்கு மறுநாள் எனது வீட்டின் வெளியே நின்று இரவு செல்போன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது பின்னால் கரடி சென்றது. இதனை பார்த்து பயந்து செல்போனை கீழே போட்டுவிட்டு ஓடும் பொழுது கீழே விழுந்துவிட்டேன். எனது பெற்றோர் வந்து என்னை தூக்கி சமாதானப்படுத்தினார்கள். பெரிய அளவில் எனக்கு காயம் இல்லையென்றாலும் கீழே விழுந்த செல்போன் முற்றிலும் சேதமாகிவிட்டது. இப்படி தொடர்ச்சியாக எங்கள் ஊரிலும் கரடி நடமாட்டம் சர்வ சாதாரணமாக உள்ளது. வெளியில் செல்வதற்கே பயமாக உள்ளது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல் பயத்துடனே செல்லும் சூழல் உள்ளது. எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.