தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணராஜ். இவர் நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சார்ந்த ஜான் என்பவரின் இடப்பிரச்சனை சம்பந்தமாக வழக்குகள் நடத்தி வந்தார். இந்த நிலையில் வழக்கு சம்பந்தமான மற்றொரு பிரிவினர் சம்பந்தப்பட்ட இடத்தில் பொக்கலைன் இயந்திரம் மூலம் சமன் செய்து கொண்டிருந்த வழக்கறிஞர் சரவணராஜனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சரவணராஜ் இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். தொடர்ந்து அவரை மீட்டு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் வழக்கறிஞர் சரவணராஜ் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரது மனைவிக்கு அரசு வேலை மற்றும் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியும் 200 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் மாவட்ட நீதிமன்ற முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் காவல்துறை துணை ஆணையர் கீதா பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வட்டாட்சியர் சரவணன் வழக்கறிஞர் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். 


இந்த நிலையில் வழக்கறிஞர் சரவணராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பாக செல்வம் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் முதற்கட்டமாக கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செல்வம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியனின் கார் ஓட்டுனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இடப்பிரச்சினை காரணமாக ஒரு தரப்பினரின் வழக்கை நடத்தி வந்த வழக்கறிஞர் ஒருவர் மற்றொரு தரப்பினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.