நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த பேரூராட்சி தலைவியாக திமுகவைச் சேர்ந்த கல்யாணி என்பவர் வெற்றி பெற்று தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் பேரூராட்சி தலைவராக இருக்கும் கல்யாணி மற்றும் செயல் அலுவலராக இருக்கும் சாசன்மேத்யூ இருவரும் சேர்ந்து அரசு பணம் 1,55,571 ரூபாய் பணத்தை, பேரூராட்சி தலைவர் கல்யாணியின் தனி வங்கி கணக்கில் 19/12/22 அன்று காசோலை மூலம் செலுத்தி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த முறைகேடுகள் குறித்து உரிய ஆவணங்கள் அளிக்கப்பட்டும் பேரூராட்சி மண்டல இயக்குனர் அலுவலகத்தில் இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணை மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்ட பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஸ்டேஷன் மேத்யூ இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் நாங்குநேரி பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் இணைந்து மனு அளித்தனர்.
இதுகுறித்து 11வது வார்டு திமுக கவுன்சிலர் சித்ரா கூறும் பொழுது, "நாங்குநேரி பேரூராட்சியில் தலைவர் கல்யாணி மற்றும் செயல் அலுவலர் இருவரும் சேர்ந்து தனி நபர் வேலைக்கான தொகை 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை தலைவர் பெயரில் செக் போட்டு எடுத்து தலைவர் பெயரில் பேரூராட்சி பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர். அது குறித்து கேட்டால் தகாத வார்த்தையில் கவுன்சிலர்கள் அனைவரையும் பேசுகின்றனர். மேலும் நாங்குநேரி பேரூராட்சியில் பணிபுரியும் மஸ்தூர் பணியாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என அனுப்புகின்றனர். இதனால் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்துள்ளோம். அங்கு நடக்கும் ஊழல் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கூறி உள்ளோம், ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றார். இது குறித்து சாசன் மேத்யூ மீது விசாரணையானது கடந்த 5 மாதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் முறைகேடுகள் குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. நீதிமன்றத்தையும் நாடியுள்ளோம்" என தெரிவித்தார்.
நாங்கு நேரி பேரூராட்சி 13 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் முத்துபாண்டி கூறும் பொழுது, "பேரூராட்சியில் உள்ள 11 மற்றும் 12 வது வார்டில் பேவர்பிளாக் சாலை அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில் இரண்டு தெருக்களிலும் சாலை அமைக்காமலேயே பணத்தை ஒப்பந்ததாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சாலை அமைக்கப்பட்டதாக தகவல் தந்துள்ளனர். எனவே அதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடமும், முதல்வரின் தனிபிரிவுக்கும் மனு அளித்துள்ளோம். ஆனால் முறையான விசாரணை என்பது இல்லை என்று தெரிவித்தார். எனவே ஊழல் செய்த பேரூராட்சி மன்ற தலைவர் கல்யாணி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு துணையாக இருந்த செயல் அலுவலர் சாசன் மேத்யூ இருவர் மீதும் நடைபெற்று வரும் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்