திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சிவசண்முகவேல் (65) - ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன வசதி கொண்ட பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது பேருந்தானது வாகைக்குளத்திற்கும் தெய்வசெயல்புரத்திற்கும் இடையில் டயர் பஞ்சராகி நின்றுள்ளது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகளை சாதாரண மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். அப்போது வயதான சிவசண்முகவேலையும் நிர்பந்தம் செய்து சாதாரண பேருந்தில் ஏற்றி விட்டதோடு நெருக்கடியான நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு ஏற்றி அனுப்பியுள்ளனர். ஆனால் வயோதிக காலத்தில் நிற்க முடியாமல் நின்றுக் கொண்டு பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் பேருந்தின் வாசல் பகுதியில் நீட்டிக் கொண்டிருந்த சிதலமடைந்த கம்பியானது சிவசண்முகவேலின் சட்டையை கிழித்து உள்ளது. கிழிந்த சட்டையுடன் தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் மீண்டும் நெல்லைக்கு திரும்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சிவ சண்முகவேல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார் ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக வயோதிக மனுதாரரான சிவசண்முகவேல் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாருக்கு இழப்பீடு தொகையாக 50 ஆயிரம் ரூபாயும், வழக்குச்செலவிற்காக 10 ஆயிரம் ரூபாயும் சேர்த்து 60 ஆயிரம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் எதிர்தரப்பினர் வழங்க வேண்டும், அவ்வாறு வழங்க தவறினால் 6.5% வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.