நெல்லை பாளையங்கோட்டை ரகுமத் நகரைச் சார்ந்த வழக்கறிஞர் ராம் பிரசாத் (வயது 36). இவர் தூத்துக்குடி ரகுமத் நகர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த 6-5-2023 அன்று பிரைடு ரைஸ் சிக்கன் ( fried Rice CH) ஆர்டர் செய்து உணவு சாப்பிட்டு உள்ளார். அப்போது பிரைடு ரைஸ் சிக்கனில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அதனை கொண்டு சென்று அது குறித்து கடை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கடை உரிமையாளர் பிரைடு ரைஸ் தயாரிக்கும் பொழுது கரப்பான் பூச்சி விழுந்திருந்தால் அது வெப்பத்தில் துண்டு துண்டாக உடைந்து சிதறியிருக்கும். இதில் உள்ள கரப்பான்பூச்சி பிரைடு ரைஸை எடுத்து வரும் பொழுது விழுந்திருக்கலாம். அதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என தெரிவித்துள்ளார். உடனே ராம் பிரசாத் அதில் கிடந்த கரப்பான் பூச்சியை தனது செல்போனில் படம் எடுத்துக் கொண்டு பிரைடு ரைஸ் வேண்டாம் அதற்கு உரிய பணம் 199 ரூபாய் மற்றும் ரசீதை தருமாறு கேட்டுள்ளார்.
இதனை ஹோட்டல் நிர்வாகம் தர மறுக்கவே இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலருக்கும் புகாரும் கொடுத்துள்ளார். தொடர்ந்து தான் சாப்பிட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய ராம்பிரசாத் வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கினை விசாரணை செய்த கிளட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் தனியர் ஹோட்டல் நிறுவாகம் செய்த சேவை குறைப்பட்டினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 5000 /-ம் வழக்குச் செலவு ரூபாய் 2000/-மும் சேர்த்து மொத்தம் ரூபாய் 7000/- ஹோட்டல் உரிமையாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் கொடுக்கத்தவறினால் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரைடு ரைஸ் சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் நெல்லை மாவட்டம் கீழப்பாட்டம் செல்வி அம்மன் கோவில் தெருவைச்சார்ந்த வழக்கறிஞர் பேச்சிமுத்து என்பவர் முருகன் குறிச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் சிக்கன் ரோஸ்ட், பரோட்டா மற்றும் ஆம்லெட் ஆகியவை 25-1-2021 அன்று இரவு உணவு ₹194/- கொடுத்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் வாங்கிய சிக்கன் ரோஸ்ட்டில் கோழி முடி இருந்துள்ளது. சாப்பிட்ட பின்பு கோழி முடி இருப்பதை பார்த்த பேச்சிமுத்து சாப்பிட்ட சிக்கன் ரோஸ்ட்யை வாந்தி எடுத்துள்ளார். அப்போது தனியார் ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்ட அவர் சிக்கன் ரோஸ்ட்டிற்கு வசூல் செய்த தொகை ₹130/-யை திரும்ப கேட்டுள்ளார். அதனை ஹோட்டல் நிர்வாகம் தர மறுக்கவே மன உளைச்சலுக்கு ஆளான பேச்சிமுத்து வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கிலும் சிக்கன் ரோஸ்டில் கோழி முடிவுடன் நுகர்வோருக்கு வழங்கியது சேவை குறைபாடு என்றும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 5000/- வழக்கு செலவு ரூபாய் 2000/-மும் சேர்த்து ₹ 7000/- தனியார் ஹோட்டல் நிர்வாகம் வழங்க உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது