இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.
சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர்.
திருநெல்வேலி – திருச்செந்தூர் வழித்தடம் தென் தமிழ்நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றாகும். வேலைக்கு செல்லும் ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், உறவினர்களை சந்திக்க செல்லும் பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் இந்த ரயில் சேவையை பெரிதும் நம்பியுள்ளனர்.
இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 15, 18, 21, 24, 27 மற்றும் 31 ஆகிய 6 நாட்களில் திருச்செந்தூரில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரயில், ஜூலை 15, 18, 21, 24, 27 மற்றும் 31 ஆகிய நாட்களில் மணியாச்சி – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் அந்த ரயில் பாலக்காட்டில் இருந்து மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். எனவே மணியாச்சி – திருச்செந்தூர் இடையே பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பயணிகள் மாற்று போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் ஜூலை 18, 21, 24, 27, 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் வழக்கத்தை விட மாற்றப்பட்ட நேரத்தில் இயக்கப்படும். இந்த ரயில் திருச்செந்தூரில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காட்டை சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் ரயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும், பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பாக ரயில்களின் இயக்க நிலையை உறுதிப்படுத்தி கொண்டு திட்டமிடுமாறும் ரயில்வே நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. இந்த அறிவிப்பால் தினசரி பயணிகள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது பயண திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
