திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அருகே திருப்பரங்குன்றம் பக்தர் மின்சாரம் தாக்கி இறந்தார். சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கோட்டைத்தெருவைச் சேர்ந்த ஜோதிபாசு (52). அங்குள்ள கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி. இவரது 3 மகன்கள் மற்றும் உறவினர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று பகலில் வந்தனர். இவர்கள் கடலில் குளித்து விட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயில் முன்பு வந்தனர்.




அப்போது இரண்டாவது மகன் பிரசாத் (22) மற்றும் தந்தை ஜோதிபாசு ஆகியோர் கோயில் புறக்காவல்நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தனர். அங்குள்ள எர்த் பைபில் மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது பிரசாத் மீது மின்சாரம் தாக்கியது. அப்போது மகனை பிடித்த தந்தை ஜோதிபாசுவை லேசாக மின்சாரம் தாக்கியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர். மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த பிரசாத்தை, 108 ஊர்தி மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரசாத் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைக் கேட்டு அதிர்ச்சியில் அவரது குடும்பத்தார் உறைந்தனர்.




கோயிலுக்கு வந்த இடத்தில் எங்கள் பிள்ளையை பறிகொடுத்து விட்டோமே என கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் இடத்திற்கு கோயில் இன்ஸ்பெக்டர் தர்மர் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது உடல் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.




இதற்கிடையே பக்தர் இறந்த சம்பவத்தை கண்டித்தும் அவருக்கு நீதி வேண்டும். பிரசாத் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். கோயிலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி பாஜக மாவட்ட பொதுசெயலாளர் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஆலய பாதுகாப்பு குழு மாவட்ட செயலாளர் வினோத் சுப்பையன், பாஜக நகர தலைவர் நவ மணிகண்டன், நகர துணை தலைவர் சண்முகஆனந்த், நிர்வாகிகள் மணிகண்டன், கிஷோர், செல்வகுமரன், பிரசாத்தின் தந்தை ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புது வெட்டியா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டடிருந்து.


இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, ஆர்.டி.ஒ மற்றும் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆகியோர் விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்