நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் கொழும்பு செட்டியார் தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் லட்சுமணன் (35). இவர் தீவிர திமுக பிரமுகராக உள்ளார், மேலும் கிருஷ்ணாபுரத்தில் ஜெராக்ஸ் மற்றும் கணினி மூலம் ஜாப் ஒர்க் செய்து கொடுக்கும் கடையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன்  பாண்டியராஜன், மற்றும் பாலமுருகன் ஆகியோரிடம் தமிழக அரசு பணியில் வேலை பெற்று தருவதாக கூறி தலா ரூ. 8 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.


மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து:


அதே போல சண்முகநாதன் மகள் சித்ரா என்பவரிடம் ரூ. 4 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பணம் வாங்கி பல மாதங்கள் பல கடந்தும் வேலை வாங்கி கொடுக்காமல் இருந்துள்ளார். இதை தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து வேலை வாங்கி தாருங்கள், அல்லது பணத்தை கொடுத்து விடுங்கள் என வற்புறுத்தி வந்துள்ளனர். அதன்படி பணம் கொடுத்த மூன்று பேருக்கும் பல்வேறு அரசு துறைகளில் வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணையை லட்சுமணன் கொடுத்துள்ளார்.


அதனை பெற்றுக்கொண்டவர்கள் வேலைக்கு சேர சென்றுள்ளனர். அப்போது அது போலியான ஆணை என தெரியவந்துள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், அதில் லட்சுமணன் என்பவர் தங்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் போல் போலியாக கையொப்பமிட்டு பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். இதனை உண்மை என நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டோம். இதே போல் பலரும் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.  எனவே காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.


போலீசார் விசாரணை:


இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு லட்சுமணனை கைது செய்தனர். தொடர்ந்து அவர் இதே போன்று வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? வேறு பகுதிகளிலும் இவர் ஏமாற்றிய சம்பவங்கள் நடந்துள்ளதா? என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். லட்சக்கணக்கில் பணம் பெற்று ஆட்சியர் வழங்கியது போல் போலி கையெழுத்திட்டு 3 பேருக்கு  பணி நியமன ஆணை வழங்கிய திமுக பிரமுகர் கைதான சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.