தூத்துக்குடி மாவட்டத்துடன் இளையரசனேந்தல் பிர்கா இணைப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 




கோவில்பட்டியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இளையரசநேந்தல் கிராமம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சியில் இருந்த இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் கடந்த 15-4-2008ல் அரசாணை வெளியிடப்பட்டு அதே ஆண்டு மே 1ஆம் தேதி இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 ஊராட்சிகள் இணைப்பு விழா நடந்தது. மற்ற துறைகள் அனைத்தும் கோவில்பட்டி வட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட நிலையில் தொடக்கக் கல்வித்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவை இணைக்கப்படாமல் உள்ளது.




இதுகுறித்து ஜமீன் தேவர்குளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி கூறும்போது,  “தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது வருவாய் மாவட்டத்துக்குள் தான் ஊராட்சி அமைப்பு இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி திமுகவும் வழக்கு தொடர்ந்தது, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை வாங்கியது. நானும் இளையரசனேந்தல் பிர்காவை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.




அதன் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்துடன் இளையரசனேந்தல் பிர்காவுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட 12 ஊராட்சி மன்ற தலைவர்களும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களும் இளையரசனேந்தல் பிர்காவை தூத்துக்குடி மாவட்ட வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சென்னையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோர சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதுவரை எவ்வித முன்னெடுப்பும் இல்லை” என்கிறார்.




குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி அலகில் சேர்க்கவும், இளையரனேந்தலை தலைமையிடமாக கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கவும் பரிந்துரை செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சார்பில் கடந்த 10-2-2020இல் பிரேரணை சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது அதன் பின்னர் தொடர்ந்து நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மத்திய அரசு மாவட்டம் வாரியாக ஊராட்சி அமைப்புகளை இணைத்து செயலியை உருவாக்கி உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இளையரசனேந்தல் பிர்கா இல்லை. தென்காசி மாவட்ட பிரிவில் உள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசில் இருந்து கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகை ஆகியவற்றை பெறுவதில் சிக்கல் இருக்கிறது இதனை பெற முடியாமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண