தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,  கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கால்நடை மற்றும் கோழியின தீவன தொழில்நுட்ப மையம் திறப்பு விழா மற்றும் கால்நடைகளுக்கான நவீன தொழில்நுட்ப கருத்தரங்கு நெல்லையில் உள்ள  கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து  கால்நடைகளுக்கான நவீன தீவன தொழில்நுட்ப கருத்தரங்கின் கையேட்டினை  வெளியிட்டார். அதனை தொடர்ந்து  பேசிய சபாநாயகர் கால்நடைத்துறை வளர்ச்சி பெற்றால்தான் தமிழகம் உலக அளவில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற முடியும் என்பதை கருத்தில் கொண்டு  தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.




மத்திய மாநில அரசுகளின்  மூலம் கால்நடைதுறையில்  ஆராய்ச்சி, உள்ளிட்ட பல்வேறு பணிகள்  நடைபெற்று வருகிறது, கடந்த காலங்களில் மத்திய அரசு 100 சதவீதம்  ஆராய்ச்சிக்காக  நிதி வழங்கிய நிலையில் தற்போது 60% மட்டுமே வழங்கி வருகிறது.  இந்த நிதியை  100 சதவீதமாக மத்திய அரசு  வழங்க வேண்டும். விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடைகள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன, எனவே  கால்நடை மற்றும் வேளாண் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள் தென்பகுதியில் மிகப்பெரிய கால்நடை பண்ணைகளை உருவாக்க முன்வர வேண்டும்.  தமிழக அரசு தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.  நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளர்ப்பில் தான் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். முட்டைக்கோழி உற்பத்திக்கான வாய்ப்புகளை தென்மாவட்டங்களில் உருவாக்க  வேண்டும் என தெரிவித்தார் .




இதனை தொடர்ந்து 1.50 கோடி ரூபாய் மதிப்பில்  அமைக்கப்பட்டுள்ள தேசிய வேளாண் வளர்ச்சித் இத்திட்டத்தின் கீழ் கால்நடை மற்றும் கோழி  தீவன தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்து விவசாயிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வழங்கினார். பின்னர் அவர்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக முதலமைச்சர் கிராமப்புற பொருளாதாரம் வளர வேண்டும் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தென் மாவட்ட கிராமப் பகுதிகளில் உள்ள மக்களுக்கான வாழ்வாதாரத்தை பெருக்கும்  வகையில் கால்நடை தீவன உற்பத்தி மையம் நெல்லையில் தொடங்கப்பட்டுள்ளது, தமிழகம் சமச்சீராக வளரவேண்டும் என்ற நோக்கில்  முதல்வரின் ஆணைப்படி  பல சிறப்பு திட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் எல்லை தாண்டியதாக பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க பிரதமர்,  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்,  மற்றும் அந்த நாட்டு தூதரகங்கள் உடன் முதலமைச்சர் நேரடியாக பேசி அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு தேவையான ஜிபிஎஸ் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக பல சமயங்களில் திசைமாறி சர்வதேச எல்லைகளை தாண்டி மீனவர்கள் செல்லும் சூழல் ஏற்படுகிறது,


 


சர்வதேச எல்லைகளை மீனவர்கள் எளிதில் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  மீன் ஏற்றுமதியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட தமிழக முதலமைச்சர் தலைமையில் மீன் ஏற்றுமதியாளர்கள் கூட்டம் நாளைய தினம் நடைபெறுகிறது. மீன்  ஏற்றுமதி இனி தமிழகத்திலேயே செய்வதற்கான  நடவடிக்கைகள் நாளைய தினம் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும், உழவர் சந்தைகள் போல் கால்நடைச் சந்தைகள் தமிழகம் முழுவதும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எருமைமாடு வளர்ப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எருமை மாடுகள் உற்பத்தியை பெருக்க பல்வேறு நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு எருமை இனங்களை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தற்போது 40 சதவீத மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர், பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட  டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதன் காரணமாக பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இன்னும்  15 நாட்களுக்குள் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார்.