இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் துண்டு, துண்டாக அமைந்துள்ள மலைத் தொடர், கிழக்கு தொடர்ச்சி மலை என்றழைக்கப்படுகிறது. இந்த மலைத் தொடர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்து தொடங்கி சாயமலை, காரிசாத் தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில்பட்டி நாலாட்டின்புதூர் குன்று, திருப்பரங்குன்றம், நாகமலை, அழகர்கோவில், யானைமலை, கொல்லி மலை, பச்சைமலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை மற்றும் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் வரை நீண்டு நிற்கின்றது. இவை காலத்தால் மேற்கு தொடர்ச்சி மலைகளைவிட பழமையானவை. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலையை போன்று தொடர்ச்சியாக இல்லாமல் துண்டு, துண்டாக காணப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகாவில், திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வல்லநாடு வெளிமான் சரணாலயம். 1641.21 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம், கடந்த 1987-ம் ஆண்டு தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தின் தென்கோடியில், வெளிமான்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சரணாலயம் இது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே வனவிலங்கு சரணாலயம் ஆகும்.
தூத்துக்குடி வல்லநாடு வெளிமான் சரணாலயம், மான்களுக்கு மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களுக்கு புகலிடமாக அமைந்து உள்ளது. இங்கு வெளிமான், புள்ளிமான், மிளா மற்றும் முயல், நரி, பல வகையான பாம்புகள், பறவைகள், முள்ளம்பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் இந்த சரணாலயத்தில் வண்ணத்து பூச்சிகளும் தங்களுக்கென்று ஒரு இடத்தை பிடித்து உள்ளன.
சரணாலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 225 வெளிமான்கள், 53 புள்ளிமான்கள், 36 மிளா ஆகியவை கண்டறியப்பட்டு உள்ளது. இதே போன்று பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 136 வகையான பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் வல்லநாடு சரணாலயத்தில் 86 வகையான பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. வல்லநாடு வெளிமான் சரணாலயம் வடகிழக்கு பருவமழை மூலம் ஆண்டுக்கு 500 மில்லி மீட்டர் மழையை பெறுகிறது. இதனை கொண்டு ஆண்டு முழுவதும் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 1500 வகையான வண்ணத்து பூச்சிகள் உள்ளன. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் 334 வகை வண்ணத்து பூச்சிகள் உள்ளன. வல்லநாடு சரணாலயத்தில் சுமார் 80 வகையான வண்ணத்து பூச்சிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இங்கு சிவப்பு உடல் அழகி, ரோஜா அழகி, கறிவேப்பிலை அழகி, மரகத அழகி, எலுமிச்சை அழகி,
அவரை வெள்ளையன், சின்ன மஞ்சள் புல்வெளியான், கொன்னை வெள்ளையன், ஆதொண்டை வெள்ளையன், வெண் சிறகன் ஆரஞ்சு நுனி சிறகன், கருஞ்சிவப்பு நுனி சிறகன், கொக்கி குறி வெள்ளையன், நாடோடி, நீலவரியன், செவ்வந்தி சிறகன், வெந்தய வரியன், மயில் வசீகரன், சாக்லேட் வசீகரன், அந்தி சிறகன், கரும்புள்ளி நீலன், சிறுபுள்ளி இலையொட்டி, பேவான் வேகத்துள்ளி உள்பட 80 வகையான வண்ணத்து பூச்சிகள் உள்ளன.வண்ணத்து பூச்சிகள் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் வாரத்தில் சரணாலயத்தில் அதிக அளவில் காணப்படும். பல பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது ரம்மியமாக காட்சி அளிக்கும்.
தூத்துக்குடி மாவட்ட வனத்துறை மற்றும் மணிமுத்தாறு அகத்திமலை மக்கள் சார் இயற்கை வனகாப்பு மையம் இணைந்து ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிள்ளிக்குளம் வேளாண் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் வண்ணத்துப்பூச்சி திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து வண்ணத்துப்பூச்சிகள் குறித்து புகைப்பட கண்காட்சி மற்றும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கனிமொழி எம்பி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். கல்லூரி மாணவி ஒருவர் கனிமொழிக்கு கையில் வண்ணத்துப்பூச்சி படத்தினை வரைந்தார்.
விழாவில் கனிமொழி எம்பி பேசுகையில், “பட்டாம்பூச்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. மாசு தரும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
தற்போது சாப்பிடும் உணவிலும் காற்றிலும் கூட பிளாஸ்டிக் கலந்துள்ளது. வீட்டு தோட்டங்களில் கூட மருந்துகளால் பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. வல்லநாடு வனப்பகுதியில் 100 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இளம் வாக்காளர்கள் உலகை பாதுகாக்காதவர்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.