தூத்துக்குடியில் சாலை தடுப்பு சுவரை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காசிலிங்கம் சில படங்களில் நடித்து இருந்தாலும் அங்காடி தெரு படத்தில் நடித்திருந்ததால் அங்காடி தெரு காசிலிங்கம் என அறியப்பட்டார். தொடந்து அரசியலில் இணைந்த இவர் மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நூதன போராட்டம் செய்வதை வழக்கமாக கொண்ட காசிலிங்கம் திமுக, சமத்துவ மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், அமமுக என கட்சி மாறிய இவர் தற்போது பாஜகவில் பாஜக மேற்கு மண்டல அரசு தொடர்பு பிரிவு துணைத் தலைவராக உள்ளார். சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டு அவ்வப்போது போராட்டங்கள் செய்து வரும் இவர் அண்ணாநகர் பகுதியில் வெயிலுக்கு மோர், தண்ணீர் பந்தல் எனவும் பொதுமக்களுக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி விவிடி பிரதான சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சாலையாக தரம் உயர்த்தப்பட்டு நவீன சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவே சிமெண்ட் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் டூவிபுரம் 1-வது தெருவில் இருந்து அண்ணா நகர் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வழியில்லை. எனவே, அந்த பகுதியில் சாலையின் நடுவே இருக்கும் தடுப்பு சுவரை உடைத்து போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மேற்கு மண்டல அரசு தொடர்பு பிரிவு துணைத் தலைவர் காசிலிங்கம் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று மதியம் காசிலிங்கம் மற்றும் அவரது கூட்டாளி பெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து கடப்பாறை மற்றும் சம்மட்டியால் சாலை தடுப்பு சுவரை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.சேகர் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்து அவர்களை தடுத்து எச்சரித்து அனுப்பினர்.
மேலும், இது தொடர்பாக உதவி ஆணையர் சேகர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காசிலிங்கம் மற்றும் பெருமாள் ஆகிய இருவர் மீதும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகி காசிலிங்கத்தை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்