தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி அவதூறாக பேசியதால் விஷம் குடித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூய்மை பணியாளர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது தற்கொலைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (56). இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணி மேற்பார்வையாளர் (மேஸ்திரி) பணியை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் பணி மூப்பு அடிப்படையில் தனக்கு தூய்மை பணி மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்கக் கோரி சுடலைமாடன், உடன்குடி பேரூராட்சி தலைவரின் உறவினரும் (மாமியார்), பேரூராட்சித் முன்னாள் தலைவியுமான ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோரை அணுகியுள்ளார்.
அப்போது சுடலைமாடன் தூய்மை பணி மேற்பார்வையாளர் பணியில் தொடர்ந்து நீடிக்க அவரிடம் பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி பணம் கேட்டதாகவும், இதற்கு சுடலைமாடன் மறுத்ததால் அவரை ஜாதி பெயரை சொல்லி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுடலைமாடன் கடந்த 17-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுடலைமாடன் நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து சுடலைமாடன் குடும்பத்தினர், அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள், தூய்மை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர் சுடலைமாடன் தற்கொலைக்கு காரணமான பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். தற்போதைய பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸாப் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பதவியை ரத்து செய்ய வேண்டும். சுடலைமாடன் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுடலைமாடன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர், தென்திருப்பேரை, நாசரேத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 10 பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, வட்டாட்சியர் சுவாமிநாதன், டிஎஸ்பி வசந்தராஜ், உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று மாலை வரை இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாபு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து ஆத்தூர் பேரூராட்சி செயல் தலைவர் வேல்முருகன் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உயிரிழந்த சுடலைமாடன் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிவாரணம், அவரது மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்படும் எனவும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள், தற்போது உள்ள பேரூராட்சி தலைவி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். முதல்கட்டமாக ரூ.6 லட்சத்திற்கான காசோலையை சுடலைமாடன் குடும்பத்தினரிடம் ஆட்சியர் வழங்கினார். இதனை தொடர்ந்து உடலை பெற்று கொள்ள சம்மதம் தெரிவித்த அவர்கள் இன்று உடலை பெற்று கொள்கின்றனர்