மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தீப்பெட்டி தொழிலுக்கு சாதகமான அறிவிப்பு இல்லாததால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2500 முழு மற்றும் பகுதி இயந்திரங்கள் கையால் செய்யப்படும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஆறு லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் 90 சதவீதம் பெண் தொழிலாளர்கள்.தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் தொடர்ந்து உயர்ந்து வருவது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்கள் உள்ளிட்டவற்றால் உற்பத்தி நலிவை சந்தித்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினத்திடம் கேட்டபோது, "தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான அட்டை, குச்சி, மெழுகு, குளோரைடு ஆகிய மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் மற்றும் சுங்கவரி உயர்வால் லாரி வாடகை அதிகரிப்பு, சொத்து வரி,மின் கட்டண உயர்வு ஆகியோற்றால் தீப்பெட்டி அடக்கச் செலவு அதிகரித்துள்ளது. ஆனால் அடக்கச் செலவுக்கு ஏற்ப வெளிச்சந்தையில் விற்பனை விலை கிடைக்காததால் இந்தியாவிலேயே போட்டி போட்டு குறைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிக்கான ஊக்கத்தொகை 11 சதவீதத்திலிருந்து படிப்படியாக குறைந்து தற்போது 1.5% தான் மத்திய அரசால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதனை மீண்டும் 11% ஆக உயர்த்த வேண்டும்,வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுவதால் தீப்பெட்டியின் தேவை குறைந்து விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.தீப்பெட்டி காண வங்கி கடன் வட்டியும் அதிகரித்துள்ளது. இது போன்ற செலவினங்களை ஈடுகட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மூலம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தீப்பெட்டி தொழில் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக கூறும் இவர் இதே நிலை தொடர்ந்தால் தீப்பெட்டி தொழிற்சாலையில் குறைந்து இதனை நம்பி வாழ்வாதார மேற்கொள்ளும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் நிலை வந்துவிடும்" என்கிறார்.