மத்திய அரசின் சீர்மிகு நகரம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 975 கோடி செலவில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் 4 நடைமேடைகள் புதுப்பிக்கப்படுவதுடன், கூடுதலாக 2 நடைமேடைகளும் கட்டப்பட்டு உள்ளன.




அங்கு தரைத்தளம் மற்றும் முதல் தளம் என கடைகள் கட்டப்பட்டு உள்ளன. ஏற்கனவே 4 பிளாட்பாரங்களில் இருந்த கடைகளின் மேல் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைத்து கடைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. இதுதவிர கழிப்பிட வசதிகள், பஸ்கள் வந்து செல்லும் விவரங்களை தெரிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டு உள்ளன. பஸ் வந்து செல்லும் 2 நடைமேடைகளுக்கு நடுவே அழகிய பசுமையான புல்வெளி அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது 4 நடைமேடைகள் போக்குவரத்துக்கு தயார் ஆகி விட்டது. மத்திய பகுதியில் இருக்கும் தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளுக்கு பஸ்கள் நின்று செல்லும் 2 நடைமேடைகள், நாகர்கோவில் பஸ்கள் நிற்கும் நடைமேடைகள் மற்றும் அதன் எதிரே அமைக்கப்பட்டுள்ள புதிய நடைமேடைகள் ஆகிய 4 நடைமேடைகளும் தயார் நிலையில் உள்ளது.




பஸ் நிலையம் நவீன முறையில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. மதுரை, சென்னை பஸ்கள் செல்லும் நடைமேடை மற்றும் அதன் எதிரே புதிதாக அமைக்கப்பட்டு வரும் நடைமேடை ஆகியவை தயார் ஆகிக்கொண்டிருக்கிறது. பஸ்கள் உள்ளே வந்து, வெளியே செல்லும் ரோடு கான்கிரீட் ரோடாக அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.


புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி தொடங்கப்பட்டதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலையம் மூடப்பட்டது. அருகில் பெருமாள்புரம் போலீஸ் நிலையம் எதிரே புறநகர் பஸ்களுக்கும், விரைவு பஸ்களுக்கும் தனித்தனியாக 2 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக பெண்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இந்த நிலையில் விரைவில் aடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்காலிக பேருந்து நிலைய வளாகம் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலைக்கு ஏற்படும். எனவே பயணிகளின் நிலை கருதி புதிய பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல் கட்டமாக தயார் நிலையில் இருக்கும் 4 பிளாட்பாரங்களை மட்டுமாவது விரைவில் திறந்து பஸ் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 




 


இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தயார் நிலையில் இருக்கும் 4 நடைமேடைகளில் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றனர். புதிய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் காலியாக கிடந்த இடத்தில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வளாகத்தில் அழகிய புல்தரை அமைக்கப்பட்டு இருப்பதுடன் ராக்கெட்டுகள், டைனோசர் மாதிரிகள் மற்றும் செயற்கை நீரூற்று, வினோத விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டு உள்ளன. டிஸ்கவரி மையம், புதுமை மையம், ரோபோக்கள் பற்றிய மையம் ஆகிய 3 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நவீன டிஜிட்டல் திரைகளில் பொதுமக்களுக்கு அறிவியல் விந்தைகள் குறித்து விளக்க படம் போட்டு காண்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மையங்கள் முன்பு விஞ்ஞானிகள் சிலைகளும், அப்துல்கலாம் முழுஉருவ சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை பாதுகாப்பாக பராமரிக்கும் வகையில் நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.