தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி பேருந்து நிலையம் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதில் 120 கடைகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் வணிக வளாகம் போன்று இயங்கும் என்றார்.




தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்டெம் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இதில் 190 வகையான அறிவியல் கருவிகள் உள்ளன. பெரிய அறிவியல் பூங்காவான இங்கு அமைக்கப்பட்டு உள்ள அறிவியல் கருவிகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு மாநகராட்சி சார்பில் இரண்டு வல்லுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கட்டண நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மழை நீர் முறையாக வெளியேறி வருகிறது. மாநகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் இனிமேல் இந்த பகுதியில் தண்ணீர் தேங்ககூடாது என அறிவுறுத்தி இருந்தார். அவரது உத்தரவை 100 சதவீதம் நிறைவேற்றி உள்ளோம்.




தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் உள்ள 55 கழிப்பறைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு சாலையில் சாய்வு தளம் அமைக்க கூடாது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எண்ட் டூ எண்ட் முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் ஒருபுறமாக வாகனங்களை நிறுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்படும் தண்ணீர் தற்போது மரம் செடிகள் வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. விரைவில் தொழிற்சாலைகளுக்கும் இந்த தண்ணீரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகத்தைப் பொறுத்தவரை கடும் தட்டுப்பாடு நேரத்திலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் முறையாக குடிநீர் கிடைத்து வருகிறது என்றார்.




இதற்காக ஒத்துழைப்பு அளித்த அதிகாரிகள் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்த அவர், தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் மூன்று மினி பேருந்துகள் மட்டும் அனுமதிக்கவும் இதற்காக பேருந்து ஒன்றுக்கு சிறப்பு கட்டணமாக 50 முதல் 100 வரை வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்தம் இடத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு 6 மணி நேரத்துக்கு ரூபாய் ஐந்தும் ஒரு மாதத்திற்கு ரூபாய் 500 எனவும், கார்களுக்கு 6 மணி நேரத்திற்கு ரூபாய் பத்து எனவும் மாதத்திற்கு ரூபாய் ஆயிரம் கட்டணம் வசூலிப்பது, அம்பேத்கர் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் பூங்காவுக்கு நுழைவு கட்டணம், கோளரங்கம் உள்ளிட்டவைகளுக்கு தனியாக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன