தூத்துக்குடி மாநகராட்சியில் துவக்கப்பட்ட அட்சயப்பாத்திரம் திட்டம் மடைமாற்றம் செய்யப்பட்டு தேவையில்லாதோர் வைத்திடுக..தேவைப்படுவோர் எடுத்திடுக எனப் மாற்றப்பட்டுள்ளது.




தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த அல்பி ஜான் வர்கீஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அன்போடு தூத்துக்குடி என்ற திட்சத்தின் ஒருபகுதியாக அட்சய பாத்திரம் என்ற திட்டத்தினை மாநகராட்சி வளாகத்தில் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பேசும்போது, ‘’தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற, உழைக்க இயலாத ஏழ்மை நிலையிலுள்ள மக்களின் பசியைப் போக்கிடும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள் வைப்பதற்காக மாநகராட்சி வளாகத்தில் ஒரு குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் வீட்டிலுள்ள பழ வகைகள், உலர்ந்த ரொட்டிகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவு, கேக் வகைகள், பேக்கரி உணவுப் பொருள்கள், பிஸ்கட், சீலிடப்பட்ட ஜூஸ் பாட்டில்கள், சீலிடப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், வீட்டில் சமைக்கப்பட்ட பொட்டலமாக கட்டப்பட்ட உணவுகள் என இவற்றை குளிர்சாதனப் பெட்டிகள் வைத்துச்செல்லலாம்.




உண்பதற்கு முன் உதவி செய்’ என்பதுதான் இதன் நோக்கம். இதன் மூலம் உணவுப் பொருள்கள் பசியால் வாடும் ஒரு ஜீவனுக்குப் போய்ச் சேரும். தொண்டு செய்யும் உள்ளமுடையவர்களையும் பசியால் வாடுபவர்கள், உதவி தேவைப்படுபவர்களை ஒரே இடத்தில் இணைக்கும் விதமாகத்தான் இந்த அட்சய பாத்திரம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள் மட்டுமல்லாமல் இதன் அருகில் இருக்கும் நன்கொடைப் பெட்டகத்தில் ஆடைகள், புத்தகங்கள், காலணிகள், பாத்திரங்கள், பேனா, நோட்டுகள் மற்றும் இதரப் பயனுள்ள பொருள்களையும் வைக்கலாம். ’தேவையில்லாததை விட்டுச் செல்க, தேவையானவற்றை பெற்றுச் செல்க’ என்பதுதான் இந்த நன்கொடைப் பெட்டகத்தின் நோக்கம். எனவே, மாநகராட்சி மக்கள் பெருமளவு உதவிட வேண்டும்’’ என தெரிவித்து இருந்தார். முதலில் பலத்த வரவேற்பை பெற்ற இத்திட்டம் நாளடைவில் இத்திட்டம் காணாமல் போனது தான் பரிதாபம்.




ஆனால் மீண்டும் தூத்துக்குடி மாநகராட்சியில் தேவைப்படாதோர் வைத்திடுக, தேவைப்படுவோர் எடுத்திடுக திட்டத்தை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் ஏற்கனவே சோதனை முயற்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் தாங்கள் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத பொருட்களை தேவைப்படுவோர்க்கு வழங்கும் முயற்சி வரவேற்பு பெற்றது. மாநகர் மக்கள் பலர் பயன் பெற்றதால் தற்பொழுது நிரந்தரமாக இதற்கென்று "தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திக" என்ற முன்னெடுப்பை தொடங்கப்பட்டுள்ளது.





இதனை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பொருட்கள் வழங்கினார். மாநகர மக்களும் தாங்கள் பயன்படுத்திய மற்றவர்களுக்கு தேவைப்படும் உபயோகமான மீண்டும் பயன்படுத்தக்கூடிய புத்தகங்கள், பேக்குகள், சீருடைகள், போர்வைகள், காலணிகள், பாத்திரங்கள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மின் சாதன பொருட்கள் ஆகியவற்றை இந்த மையத்தில் வைத்திடுமாறும் தேவைப்படுவோர் இம்மையத்திற்கு வந்து பெற்று கொள்ளுமாறு மாநகராட்சி மேயர் ஜெகன் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 





 

இது குறித்து விவசாயி சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.முத்துவிடம் கேட்டபோது, திட்டம் துவங்குவது வரவேற்கதகுந்தது. ஆனால் தொடர்ச்சியாக திட்டம் செயல்படுகிறதா என்பதை மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்ற அவர், கடந்த காலத்தில் துவக்கப்பட்ட அட்சய பாத்திரம் திட்டம் நாளடைவில் இல்லாமலேயே போனதையும் , அட்சய பாத்திர திட்டத்தினால் பயனடைந்தோர் பசிக்கு ஏதாவது இருக்கா என தேடி வந்ததும் உண்டு என்கிறார்