தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு பொது விநியோகத்திட்டம மூலம் ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசி, பச்சரிசி இலவசமாகவும், துவரம் பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய், மண்ணென்ணெய், மைதா, ரவை, சோப்பு, மளிகை பொருட்கள் என பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, பொருள் இல்லா அட்டை, காவலர் அட்டை என குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் அரிசி குடும்ப அட்டையில் AAy அட்டைக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. PHH அட்டைக்கு உறுப்பினர் ஒருவருக்கு 5 கிலோ வீதம் உறுப்பினர்கள் அடிப்படையில் கணக்கிட்டு அரிசி வழங்கப்படுகிறது. NPHH அட்டைக்கு மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இவ்வரிசியை தமிழக அரசு இந்திய உணவு கழகத்திடம் கிலோ ரூ.5.85க்கு மானியத்தில் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
இந்நிலையில், இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் கூறும் பொழுது, ”கடந்த காலங்களில் ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட அரிசியில் குருணை, கடுக்கான் கலந்து காணப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு கடந்த ஆறுமாத காலமாக பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியில் கடுக்கான், குருணை முற்றிலும் நீக்கப்பட்டு சுத்தமான அரிசியை விநியோகித்து வருகிறது. இதனால் இவ்வரியை பயன்படுத்தும் அடித்தட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் 21.08.2021 அன்று இந்தியா முழுக்க பொது விநியோகத்திட்டம் மூலம் வழங்கப்படும் அரிசியில் இரும்புச் சத்து உடைய செறிவூட்டப்பட்ட செயற்கை அரிசியை கலந்து விநியோகிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனடிப்படையில் ரேசன் அரிசியில் ரப்பர் அரிசி எனப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வருடம் 31.07.23 அன்று தமிழக அரசின் பொது விநியோகத்திட்ட ஆணையர் அவர்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை குறிப்பில் இரத்த சோகை உடையவர்கள், குழந்தைகள் ரேசன் அரிசியில் கலப்படம் செய்யப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை வாங்கி உண்ண வேண்டாம் எனவும், அவர்களுக்கு செறிவுட்டப்பட்ட அரிசியை வழங்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் மீண்டும் ரப்பர் அரிசி எனப்படும் செறிவுட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படுகிறது. இந்த அரிசி பெரும்பாலும் அடித்தட்டு மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் தவிர இரத்த சோகை உள்ளவர்கள், குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி அல்லாத சுத்தமான அரிசியை விநியோகிக்கப்படுவதில்லை. குடும்ப அட்டை அடிப்படையில் மொத்தமாகவே அரிசி வழங்குகின்றனர். இவ்வரிசி சாதத்தை குழந்தைகள், இரத்த சோகை உடையவர்கள் சாப்பிட்டால் உபாதைகள் ஏற்படுகிறது. வயிறு மந்தமாக உள்ளது. இனம் புரியாத நோய் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேசன் அரிசியில் ரப்பர் அரிசி எனப்படும் இரும்புச் சத்து உடைய செறிவூட்டப்பட்ட அரிசியை கிராம் அடிப்படையில் இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு தனியாக வழங்கி, செறிவூட்டப்பட்ட அரிசி தேவைப்படுபவர்கள் மட்டும் தேவையான அளவை அரிசியில் பயன்படுத்தி கொள்ளும்படி தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.