தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஷவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொய்யான தகவல் மூலம் பதிவுச் சான்றிதழ் பெற்ற 2 ஷவர்மா உணவகங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 11 கிலோ ஷவர்மா ரொட்டி, 10 கிலோ ஷவர்மா மசாலா மற்றும் 3 கிலோ சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.




நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஷவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஷவர்மா உணவகங்களில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவக்குமார், சக்திமுருகன், காளிமுத்து மற்றும் ஜோதிபாசு ஆகியோர் கடந்த இரண்டு தினங்களாக ஆய்வு செய்தனர்.


மொத்தம் 16 ஷவர்மா கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, காலாவதி தேதி இல்லாத 11 கிலோ ஷவர்மா ரொட்டிகளும், சந்தேகத்துக்கு இடமான 3 கிலோ சிக்கனும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், 10 கிலோ தப்புக்குறியீடான மசாலா மற்றும் சுகாதாரமற்ற வகையில் இருந்த மசாலாவும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தொடர்ந்து காலாவதி தேதி இல்லாத ஷவர்மா ரொட்டி தயாரித்த நிறுவனமும் ஆய்வு செய்யப்பட்டு, லேபிள் இல்லாத 4 கிலோ ரொட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்புத் துறைக்குத் தவறான தகவல் வழங்கி, உரிமத்துக்கு பதிலாக, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்ற 2 ஷவர்மா கடைகளுக்கு நிறுத்த அறிவிப்பு சார்பு செய்யப்பட்டு, கடைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.


மேலும், ஒரு புரோட்டா கடையை ஆய்வு செய்ததில், அதன் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியாகியிருந்தது கண்டறியப்பட்டு, அதன் இயக்கத்தை நிறுத்தி வைத்தும் நியமன அலுவலரால் உத்திரவிடப்பட்டுள்ளது. இதுவரை ஆய்வு செய்ததில், தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரை எந்த ஷவர்மா கடையிலும் உறையவைக்கப்பட்ட சிக்கன் பயன்படுத்துவது கண்டறியப்படவில்லை.


இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ச.மாரியப்பன் கூறியதாவது: ஷவர்மா உணவு வணிகர்கள் ஷவர்மா அடுப்பை தூசிகள் மற்றும் பூச்சிகள் விழாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைத்திடல் வேண்டும். சிக்கன் வெந்திருந்தாலும், அதனை தவாவில் சிறிது நேரம் வேக வைத்து, ஷவர்மா ரொட்டியில் பயன்படுத்த வேண்டும். மீதமான சிக்கனை அன்றே உரிய முறையில் அழித்திடல் வேண்டும். உரிய லேபிள் விபரங்களுடன் உள்ள ஷவர்மா ரொட்டிகளை மட்டுமே வாங்கி பயன்படுத்திடல் வேண்டும். உணவகப் பணியாளர்களுக்கு 'தொற்றுநோய் தாக்கமற்றவர்' என்று மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும். பணியாளர்களுக்கு டைபாய்டு உள்ளிட்ட உணவின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். முட்டையில் இயல்பாகவே பாக்டீரியாக்கள் இருப்பதினால், கிருமிநீக்கம் செய்யப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட 'மையோனைஸ்' மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். கிருமிநீக்கம் செய்யப்படாத முட்டையில் தயாரித்த 'மையோனைஸ்' பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பிரீசர் பயன்படுத்தும் வணிகர்கள் உரிய வெப்பநிலையை பராமரிப்பதற்கான பதிவேடுகளை வைத்திருக்க வேண்டும்.பிரீசர் தூய்மையாக இல்லையெனில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.